Saturday, March 1, 2014

‪நான் மட்டும் எப்பிடி தப்புவேன்...

மனித சித்தம் எத்தனை எத்தனை
பிரமைகளையோ உருவாக்கிறது
காலத்தின் வேகத்தைப்பற்றி நிர்ணயமும்
அந்தப் பிரமைகளில் ஒன்று.

காலம் ஒரே சீராகத்தான் ஓடுகிறது
இத்தனை மாத்திரைகள் கொண்டது ஒரு நாழிகை
இத்தனை நாழிகை கொண்டது ஒரு நாள் என்று
சூரியன் உதித்து மறைந்து மீண்டும் உதிக்கும் வரையில்
உள்ள நேரம் ஒரே ஒழுங்காகத்தான் அமைத்திருக்கிறது

நேரம் வேகமாகவும் ஓடுவதில்லை
அடியோடு ஆமை நடையும் போடுவதில்லை
ஆனால் மனித சித்தம் இந்த இயற்கை நிலையையும்
பல சமயங்களில் மாற்றி விடுகிறது
சிந்தனையில் சுழலும் எண்ணங்களுக்குதக்க படி
நேரம் வேகமாக ஓடுவது போலவும்
ஆமை வேகத்தில் நகருவது போலவும்
பிரமை மனிதனுக்கு உண்டாகிறது
சிந்தித்தால் ஏற்படும் மகிழ்ச்சி , வேதனை , கவலை 
ஆகிய உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடி
காலமும் வேகமாகவோ , மெதுவாகவோ
நகருவதாக நினைக்கிறோம்
வெறும் பிரமைதான்
இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து
தப்பியவர் யாருமே இல்லை...

காதலுக்கு தேவைப்படுகிறது...

இந்தக் காதலுக்கு எப்படியோ ஏதோ
ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது

கொஞ்சம் பொய்
முத்தம் கவிதை கண்ணீர்
இப்படி ஏதோ ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது...

விதி...

இந்தப் பூவுலகில் பிறந்தவர்க்கு
வாழ்க்கையே ஒரு புதிர்
விதியின் ரகசியங்களை மானிடர் அறிவது கடினம்
அதை அறிந்தாலும் புரிந்து கொள்வதென்பது மிகவும் கடினம்
வரப்பிரசாதம் போல வந்தது பெரும் தொல்லையாகிப் போகும்
அதே சமயம் எதிரி கூட
நண்பன் போலத் தோற்றத்தில் தெரிவான்

‪எவன் நல்லவன் எவன் கெட்டவன்‬ என்று
கண்டு பிடிக்கிறதிலே வாழ்க்கை போகிறது...

கவலைகள் ரசியுங்கள்...

கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்...

பெண்ணின் உடம்பு ஒரு யாழ்...


பெண்ணின் உடம்பு ஒரு யாழ் போன்றது
காதலன் அணைப்பில் அவள் இருக்கும் போது
அவளுடைய உடல் நரம்புகள் எல்லாம்
யாழின் நரம்புகள் போல் ஆகிவிடுகிறது...

எழுதாத சட்டம்...

ரசிகத் தன்மையுள்ளவர்கள் மட்டுமே
காதலர்களாக ஆக முடியும் என்று
எழுதாத சட்டம் ஒன்று உண்டு
பிரம்மனின் படைப்பிலே...

நான் கற்றுக்கொள்ளப் பல விஷயங்களிருக்கின்றன...

இந்த உலகத்தில் இன்னும் நான்
கற்றுக்கொள்ளப் பல விஷயங்களிருக்கின்றன
நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிகொண்டிருப்பவர்கள்

பொல்லாதவர்களாகி விடுகிறார்கள்
பொல்லாதவர்கள் என்று நினைத்தால்
நல்லவர்களாகி விடுகிறார்கள்
ஆனால்
நடந்து போன நாட்கள் எல்லாம் வேறு விதமாய்
நடந்திருக்க கூடாதா என்று தினந்தோறும் தோன்றும்
அதுவும் ஒரு கற்பனை
இனி எதிர்காலம் எப்பிடி நடக்க வேண்டும்
என்று யோசிப்பதும் கற்பனையே
இப்பிடி நிகழ்காலத்தை
அந்தக் கற்பனைப் பனி மூட்டம் மூடுகிறது
திடமாய் நிற்கும் மலையை மூடும் மேகக் கூட்டம் போல

இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக
எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை...

அதிக பட்சமான அன்பே ஆபத்தில் முடிகிறது...

மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவது தவறில்லை
அதற்குத்தானே கடவுள் நம்மை 
ஆறறிவுடன் படைத்திருக்கிறார்
அன்பு நம்மை மனிதனாக அடையாளம் காட்டுகிறது
ஆனால்
அதுவே வெறியானால் நம்முள் இருக்கும் 
மிருகத்தை வெளிக்கொண்டு வருகிறது
அதிக பட்சமான அன்பே ஆபத்தில் முடிகிறது...

உறவு...

உறவு என்பது
எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வலை
இரும்புக் கயிற்றில் பின்னிய சக்தி வாய்ந்த வலை
திமிங்கலம் சிக்கினால் கூட அதிலிருந்து வெளிவர முடியாது...

கண்ணீர்...

மனதில் உள்ள துன்பங்களையெல்லாம்
வெளியில் வாரிக் கொட்டக்
கண்ணீர்தான் சிறந்த வழி...

கை ரேகைகள்...

குழந்தை கருவில் இருக்கும் போது
அதன் எதிர்காலம் முழுவதும்
அதற்குத் தொடர்படம் போலத் தெரியுமாம்
அதன் பின் பூமி காற்றைக் சுவாசித்த பின்பே
அனைத்தையும் மறந்து விடுமாம் அந்த குழந்தை

அது அனைத்தும் தெரிந்த போது கையை
மடித்து வைத்திருக்கும் போது
ரேகைகள் உருவாகுமாம்...

கோவத்திலும் சந்தத்திலும் சில பெண்கள்...

சாந்தத்தில் பெண்களின் குரல்
தேனின் சொட்டுப் போல இனிக்கும்
கோபத்தில் பெண்களின் குரல்
தேனீயின் கொட்டுப் போல வலிக்கும்
ஆனால் சில பெண்களின் குரல்
சாந்தத்திலும் கோபத்திலும்
யாழ் எடுத்து வாசிப்பது போல் இருக்கும்...

இயற்கை அழிவு...

மனிதன் இயற்கையை ஒடுக்கி அடக்கிவிட்டுத்
தன் பெயர் சொல்லும் கட்டடங்களைக் கட்டுகிறான்
அவன் எப்போது அயர்வான்
தன் இடத்தை மீண்டும் அடைவதற்கு என
இயற்கை தன் பங்குக்கு காத்திருக்கிறது...

நிதானம்...

பேச்சிலும் சரி எழுத்திலும் சரி
அறிவாளிகள் நிதானத்தைக் கடைப்பிடிப்பார்கள்
ஏனென்றால்
ஆண்டவன் மனிதனுக்கு அளித்திருக்கும்
இந்த இரண்டு சாதனங்களும்
அதிக சக்தி வாய்ந்தவையாயிருப்பது மட்டுமின்றி
கொஞ்சம் நிலை தவறினால்
எழுத்தும் பேச்சும் அவற்றைக் கையாள்பவர்களையே
சங்கடத்தில் மாட்டி வைத்துவிடுகின்றன
மனித வரலாறு கண்ட உண்மை இது...

எண்ணம்...

எண்ணம் தான் எத்தனை வேகமுடையது
அது எத்தனை தூரத்தை
எத்தனை விநாடிகளில்
கடக்க முடிகிறது...

காதல்...

ஆண்களின் அசட்டுச் சிரிப்புக்கும்
பெண்களின் பொய்க் கோபத்துக்கும்
இடையே எழுவதுதான் காதல்...

பெண்களின் ஆசையின் ஆழம்...

ஆசை ஆண்மகனுக்கு ஏற்பட்டால்
உதறி விடுவார்கள்
பெண்களுக்கு ஏற்படும் ஆசை
வெளிக்குத் தெரியாது ஆனால் உள்ளூர ஊரும்
அந்த ஆசையின் வேகமும் ஆழமும் பெரிது
பெண்களில் இதய ஆழத்தை அளப்பது
அத்தனை சுலபமில்லாத காரியம்...

இயற்கையிலிருந்து மனிதன் பாடம் கற்கிறான்...

உலகமக்கள் அனைவரும்
பொன்னையும் வெள்ளியையும்
ஏன் உயர்வாக மதிக்க வேண்டும்
ஏன் அந்த உலோக நாணயங்களை
வட்டமாக அமைக்க வேண்டும்
இயற்கையிலிருந்து (சந்திரன் ,சூரியன் ,வெள்ளி)
மனிதன் பாடம் கற்கிறான்
ஆனால்
முழுப்பாடத்தையும் அவன் கற்பதில்லையே
கற்றால் உலகில் சண்டை இருக்காது
பொறமை , போட்டி இருக்காது
சுபிட்சமே நிறைத்திருக்கும்...

தெய்வம் உண்டா இல்லையா?...

தெய்வம் உண்டா இல்லையா?
ஆதிகாலம் முதல் மனிதன் தன்னை தானே
கேட்டு வரும் கேள்வி இது 

அவ்வப்பொழுது பதிலும் சமயோசிதமாக வந்திருக்கிறது

உடலில் கொழுப்பும் ரத்த வேகமும் உள்ள சமயங்களில் 
மனிதனின் மனத்தில் நாத்திகமும் 

அந்தச் சக்திகள் அகன்றதும் ஆத்திகமும் எழுந்து நிற்பதே 

இயற்கையாக இருந்து இருக்கிறது 

கொழுப்பும் ரத்த வேகமும் நிரம்பியவர்களுக்கும் 
அவர்கள் முயற்சிகள் தோல்வியடையும்போது 
தெய்வ சிந்தனை உண்டாகிறது 
"தெய்வம் இருக்கிறது அதன் சக்தி தான் பிரதான சக்தி"
என்பதை உணருகிறார்கள் 

இந்த உண்மைய வலியுறுத்தவே ஓர் ஆங்கில ஆசிரியர் 
"மனிதப் பிரயத்தனங்கள் அனைத்தும் தோல்வி அடையும் போது 

தெய்வம் பிறக்கிறது" என்று சொன்னார்...

நெருப்பு காதல்...

காதலை நெருப்பு என்று கூறுவது முற்றும் பொருத்தமானது
நெருப்பு சொற்பமாயிருந்தால்
காற்று அடித்ததும் அணைந்து விடுகிறது
பெருநெருப்பாயிருந்தால் காற்று அடிக்க அடிக்க
நெருப்பின் ஜ்வாலை அதிகமாகிக் கொழுந்துவிட்டு எரிகிறது
நெருப்புக்குக் காற்று எப்படியோ
அப்படிக் காதலுக்குப் பிரிவு
பொய்க் காதலாயிருந்தால் பிரிவினால்
அது அழிந்து விடுகிறது
உண்மைக் காதலாயிருந்தால் பிரிவினால் அது
நாளுக்கு நாள் வளர்ந்து பெரு நெருப்பாய் மூளுகிறது...

மனிதன்...

மனித சக்திக்கு எதுவும் மீறியதல்ல
பிசாசுகளையும் பூதங்களையும்
உருவாக்கியவனே மனிதன் தான்
அவற்றை அடக்க மந்திரங்ககளையும்
உருவாக்கியவனும் அவனேதான்...

போர்...

தனி மனிதன் இன்னொருவனுடைய உயிரை
வாங்குவது கொலை
அதே கொலையை மனிதர்கள் கூட்டமாகப்
பெரு அளவில் செய்யும் போது
அது போர் என்ற புனிதச் சொல்லால் அழைக்கப்படுகிறது...

பெண்களுக்காக ஏற்பட்ட துணைவர்கள் மூவர்...

வாழ்க்கையில் பெண்களுக்காக ஏற்பட்ட
துணைவர்கள் மூவர்

இளமையில் தந்தை
வாலிப பருவத்தில் கணவன்
முதுமையில் மகன்

இந்த மூவருக்கு அடங்கியே
பெண்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்
அந்த மூன்று துணைவர்களில்
பெண்கள் இரண்டறக் கலப்பது
வாலிப பருவத்தில் கிடைக்கும் துணையுடன் தான்
இனம் தெரியாத இளமைப்பருவமே
வாலிபத் துணையின் அவசியத்துக்கு கொடி காட்டுகிறது
முதுமை வாலிபத் துணையின் நாள்களை
நினைத்து சாந்தி பெறுகிறது...

புதிர்...

விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள்
விவரம் புரியாத எத்தனையோ பதில்கள்
இரண்டும் கலந்ததுதான் இயற்கையளிக்கும் காதல் பாசம்
அதைக் காதலாகவும் இலக்கியத்திலும் அகராதியிலும்
வித்தியாசம் மிக பெரிதாயிருக்கலாம்
அனுபவத்தில் ஏற்படும் வித்தியாசம் மிக நுண்ணியது
கண்ணுக்குத் தெரியாத கயிறு அது
விதி ஒன்றே விளக்கக்கூடிய பெரும் புதிர்
காலம் ஒன்றே அவிழ்க்கக்கூடிய பெரும் சிக்கல்...

எட்டாத பழம்...

எட்டும் பழத்தை விட
எட்டாத பழத்துக்கு இனிப்பு அதிகம்
முயற்சியின் கஷ்டம் அதற்குள்ள
மதிப்பை ஒன்பது மடங்காக்குகின்றது...

இயற்கையின் விந்தைக் கரங்கள்...

மனிதன் காலை வைக்ககூட
இஷ்டப்படாத சேற்றிலிருந்து அவன் எடுத்து
மணந்து இன்பப்படும் தாமரை முளைக்கிறது

தொட்டால் குத்துமே என்று அவன் வெறுக்கும்
முட்களுள்ள மடல் கூட்டத்தில் பிறக்கிறது
அவன் ஆசையுடன் எடுத்து மகிழும் தாழை மலர்

கையில் பட்டாலே அடுத்த வினாடி 
நீர் விட்டுக் கழுவிகொள்ளும் கரியிலிருத்து 
அவன் பெருமையுடன் நகைகள் செய்து
அணிந்து கொள்ளும் வைரம் விளைகிறது 

வெட்டி தூர எறியும்
சிப்பியிலிருந்துதான்
கட்டி முத்து கிடைக்கிறது

இயற்கையின் விந்தைக் கரங்கள்
கெட்டதிலிருந்து அழகையும்
அதிலிருந்து நல்லதையும்
உருவாக்கி விடுகின்றன...

சோதிடம்...

விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப்படுகிறது
நட்சத்திரங்ககளின் அசைவுக்குத் தகுந்தபடி
மனித வாழ்க்கை இயங்குகிறது என்று சோதிடம் கூறுகிறது...

மனச்சலனம்...

மனச்சலனம் மட்டும் இல்லாதிருந்தால்
உலகத்தில் வாழ்க்கை எத்தனை இன்பமாயிருக்கும்

ஒரே இன்பமயமாகிவிட்டாலும் வாழ்க்கைக்கு
அர்த்தமிருக்காது
துன்பத்தின் கரையில் தான்
இன்பத்தை அனுபவிக்க முடியும்...

மனிதர்களின்‬ மனம் பலவிதம்...

சில பொருள்களை பிரிந்தால்
மீண்டும் காணவேண்டும் அடைய வேண்டும்
என்னும் ஆவலிலே மற்ற வேலைகளைக் கவனிக்காமல்
பொழுதைக் கழிப்பவர்கள் உண்டு
பிரிந்த பொருளை மீண்டும் எப்பொழுதாவது சந்திப்போம் 
எனும் ஓர் ஆசையால் மனத்தின் ஒரு மூலையிலே
அந்த நினைப்பு பாதிக்கப்பட்டு மற்றவற்றை 
கவனித்து விட்டுச் செல்லலாம் என்ற 
குண மூடையவர்களும் உண்டு...

காதல் என்றால் என்ன?...ஒரு பொருள்மீது இதயத்தை படரவிட்டு
அழியாது நிலைத்திருப்பது தானே காதல்

ஒரு பொருள் அதன் மதிப்பு எல்லையற்றது
அளவிட முடியாதது அதைப் பார்த்தவுடனேயே
நட்டம் ஏற்படுகிறது அதை அடைய துடிக்கிறோம்
ஈடுபாடு அதிகமாகிறது அதை அடைவதற்கு
ஏற்படும் இன்னல்கள் எதுவாயினும் ஏற்கத் துடிக்கிறோம்
அந்த நிலை ஏற்படுவதற்கு
இயங்கும் சக்தியைத்தான் காதல் என்கிறோம்...

நட்பும் பாசமும்...

நட்பு என்பதும் பாசம் என்பதும் எப்போது
ஏன் எப்பிடி நடக்கிறது என்று
காரணகாரியம் சொல்ல முடிவதில்லை...

தாய்...தாயை மிஞ்சிய சுமை தாங்கி கிடையாது
அங்கே ஒரு பிள்ளை எத்தனை பாரத்தை
வேண்டுமானாலும் இறக்கலாம்
அன்னையின் அறிவுக்கு மிஞ்சிய சாத்திரம் கிடையாது
அங்கே எந்தப் பிரச்சனைக்கும் விடை காணலாம்
அம்மாவின் முகத்துக்கு மிஞ்சிய சந்தனம் கிடையாது
அங்கே எந்த வெப்பத்துக்கும் குளிர்ச்சி பெறலாம்...

கோபம்...

கோபம் யார் கண்ணையும் மறைக்கவல்ல
ஒரு பெரும் திரை
அந்தத் திரையைச் சரேல் சரேலென
மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப்
பழகிக் கொண்டுவிட்டால் உலகத்தில்
பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும்...

அன்பும் ஆசையும்...

அன்பு மெள்ள மெள்ள முளைப்பதில்லை
திடீரென்று தான் ஏற்படுகிறது
அதுவும் ஆசையைப் போல்தான்

அழகான மலரைப் பார்க்கிறோம்
திடீரென்று ஆசை பிறக்கிறது
ஓர் அழகான பெண்ணைப் பார்க்கிறோம்
திடீரென்று அன்பும் பிறக்கிறது
அன்பும் ஆசையும் முளைப்பது சில விநாடிகளில்தான்
அவற்றுக்கும் காலமும் யோசனையும் தேவையில்லை...

தத்துவம்...

வறண்ட வாழ்க்கைக்கு அவ்வப்பொழுது
சிறிது உயிரூட்டும் ஒரே சாதனம் தத்துவந்தான்
தத்துவங்களிலும் பல மாறுபாடுகள் உண்டு
அவை மனித சுபாவத்துக்குத் தக்கபடி
மாறுபட்ட உணர்சிகளையும் அர்த்தங்களையும்
அளிக்க வல்லவை
வாழ்வில் எது வளர்ச்சி எது விழ்ச்சி
என்பதை நிர்ணயிப்பதுகூட சுலபமல்ல...

மண்...

நாம் வாழும் மண்
எந்த வித்தியாசத்தையும் காட்டுவது கிடையாது
எந்த ஜீவராசிகளையும் சமமாகப் பாவிக்கிறது
மண் தாய் அவள் தான் குழந்தைகளில்
யாரையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை
எல்லோரையும் அழைத்துக்கொள்கிறாள்
என்றாவது ஒரு நாள்.

மண்ணிடமிருந்து வருகிறோம்
மண்ணால் வளர்கிறோம்
மண்ணுக்கே போகிறோம்
மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

காதல்...

உறக்கத்திற்குக் காதல் பெரும் விரோதி
உறங்காத சமயத்திலும் கனவை அளிக்கும் சக்தி
காதல் ஒன்றுக்குத்தான் உண்டு...

கண்ணீர்...

துன்பம் அளவுக்கு அதிகமாகிவிட்டால்
கண்ணீரும் வியர்வையாகி விடுகிறது...

பயம் வேறு பக்தி வேறு...

பயம் வேறு பக்தி வேறு
பயம் மனத்தின் உளைச்சலிருந்து முளைக்கிறது
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து ஏற்படுகிறது
இரண்டும் இணைவது கஷ்டமென்றாலும்
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்

உலகத்தில் பக்தியைக் காட்டுபவர்களில்
நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது போருக்குப்
பயத்திலிருந்தே பக்தி உண்டாகிறது
வியாதியின் பயத்திலிருந்து விடுபடப் பலர்
கோயிலுக்குப் போய் அர்ச்சனை முதலியன செய்து
தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள்
இன்னும் சிலர் பணக் கஷ்டத்தினால் ஏற்படும்
பயத்தை நீக்கிக் கொள்ளப் பலவித பிரார்த்தனைகளைக்
செய்து பக்தியைக் காட்டுகிறார்கள்
தங்களுக்கு ஏற்படும் பலவித கஷ்டகளுக்குத்
தெய்வ அபசாரம் காரணமாக இருக்குமோ
என்ற பயத்தால் அதைப் பக்தி மூலம்
நிவர்த்தி கொள்ள முயலுகிறார்கள் இதனால் தான்
தெய்வங்களிடத்தும் அவற்றின் அருளுக்கு
வழிகாட்டும் பெரியோர்களிடத்தும்
பயபக்தி வேண்டும் என்று
பயத்தையும் பக்தியையும் இணைத்தே
உலகம் கூறுகிறது...

அம்மா...


மற்றக் கடவுள்களைப்போல
ஏனோதானோ என்று
படைத்து மட்டும் விடாமல்
என்னை படைத்து இந்த உலகத்தில்
வாழவும் பழக்கிவிட்டாள் என் அம்மா...

உலகம் மிகச் சிறியது...

உலகம் மிகப்பெரிது என்று நாம் எண்ணுகிறோம்
ஆனால் அது உண்மையில் மிகச் சிறியது
ஏனென்றால்
நம்மையும் அறியாமலே நாம் எண்ணாத
இடங்களுக்குப் போகிறோம்
மனத்தாலும் சிந்திக்காத மனிதர்களைச் சந்திக்கிறோம் 
கனவிலும் எழாத நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம்
ஆகவே ஆண்டவன் படைப்பில் 
இந்தப் பரந்த உலகம் மிகச் சிறிய கிரகம் தான்
அதன் நியதியால் வாழ்க்கையின் அலைகளில்
எடுத்து வீசப்படும் நாம் 
இந்தக் கிரகத்தின் எந்தப் பாகத்தையும் அடைகிறோம்
எதிர்பாராத பல விசித்திரச் சம்பவங்களில் அகப்பட்டுக் கொள்கிறோம்
அப்படி அகப்பட்டுக் கொள்ளும்போது 
ஆயுளில் அறியாத முக்கிய உண்மைகளையும் அறிகிறோம்...

முதற்காதல்...

மனித வாழ்க்கையில் முதற்காதல்
ஒரு மகாகாவியம்
அதற்குப் பின்னால் வாழ்க்கையில்
எத்தனை பெண்கள் வந்தாலும்
அவர்கள் தற்கால அழகிகளாகவே 
தோற்றமளிக்கிறார்கள்...

மரங்கள்...மரங்கள் மனுஷனைப் பார்த்து கேட்டுச்சாம்
நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக
எத்தனை லட்சம் சிலுவைகளைத் தந்திருக்கிறோம்
ஆனால் மனிதர்களே, உங்களால் ஏன் ஒரு
ஏசு கிறிஸ்துவைக்கூட தர முடியவில்லை என்று...

இயற்கையின் ரசிகன் நான்...

வானத்தை ரசிக்காத நாளே இல்லை
வானம் ஒரு நகரம் போல எனக்கு தோன்றும்
விண்மீன்கள் பார்த்தவுடன் என் காதலி கூந்தலில்
ஆபரணமாக சூட்ட நினைப்பேன்

வானில் தெரிந்த நகரம் பெரும் சனத்தொகை
கொண்ட ஒளிமயமான ஒரு நாடு போலவும்
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு விளக்கு
எறிவது போல எனக்கு தோன்றும்

ஆனால் அது அமைதியான நகரம்
ஒருவர் கூட ஒரு சப்தமும் எழுப்பவில்லை
நான் தான் பெரியவன் நான் செய்வதுதான் சரி
என்ற குரல்களே வரவில்லை
நாங்கள் தவறு செய்யவில்லை எல்லாம்
தற்செயலாகத்தான் நடந்தது என்று யாரும்
சாக்குபோக்கும் சொல்லவில்லை

தனக்கு மேலிருப்பது தன் சாதனைகளை
தம்பட்டம் அடித்துக் கொள்ளாத நாடு

நான் இப்பிடி வானத்தை ரசித்து கொண்டு இருப்பேன்
வானத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்...

நம்மை அறியாமல் ஒரு சக்தி...

மனித கண்ணுக்கோ கருத்துக்கோ புலப்படாத
ஆண்டவனின் சக்திக் கயிறுகள்
எப்பிடியெல்லாம் மனிதப் பொம்மைகளை இயக்குகின்றன
எந்தெந்த இடங்களில் கொண்டு மோதுகின்றன
நம்மை அறியாமல் ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது...

வாய்க்கும் உள்ளத்துக்கும்...

வாய்க்கும் உள்ளத்துக்கும்
எதோ பெரும் ஏற்பாடு ஒன்றிருக்க வேண்டும்
ஒன்று செயலற்று இருக்கும் போது தான்
இன்னொன்று துடிப்புடன் பேசத் துவங்குகிறது...

காதலர்களுக்குள்ள வித்தியாசம்...

பொண்ணுங்க அளவ காதலிப்பாங்க
அதிகமா புரிஞ்சுக்குவாங்க

ஆம்பளைங்க அதிகமா காதலிப்பாங்க
அளவ புரிஞ்சுப்பாங்க...

எது அழகு எது அழிவு...

கண்ணுக்கு மிக அழகாகத் தெரியும்
நல்ல பாம்பிடமும் தான் மனிதன்
உயிரை குடிக்கும் சிறந்த விஷம் இருக்குறது

நாக்குக்கு ருசிக்கும் இனிப்பில்தான்
மனித சக்தியை உறிஞ்சி நாசம் செய்யும்
கடுமையான வியாதிகள் மறைத்து கிடக்கின்றன

அழகிய நெருப்பு ஜுவாலைதான்
எதையும் பொசுக்கி அழித்து விடும்
சக்தி இருக்கிறது

அழகிய கடலலைகள் தான்
உலகத்தின் மாபெரும் நகரங்களை அழித்து
பசுஞ் சோலைகளை பாலைவனக் காடுகளாக்கி விடுகின்றன

இப்பிடி விகாரத்திலிருந்து அழகையும்
அதிலிருந்து விகாரத்தையும்
அழிவிலிருந்து ஆக்கத்தையும்
ஆக்கத்திலிருந்து அழிவையும்
இயற்கையும் விளைவிப்பதால்

எது அழகு எது விகாரம்
எது ஆக்கம் எது அழிவு என்பதை
மனிதன் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
புரிந்து கொள்ள முடியாத பெரும் பிரமையிலேயே
கால வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது...

தாய்மை...பெண்ணிடம் தாய்மை தத்துவத்தைப் படைத்து விட்ட ஆண்டவன்
முதன் முதலில் அவர்கள் அந்தப் பேற்றை அடையும் போது
கருவிலே வளரும் குழந்தையை எண்ணி
அந்த தாய் இன்ப நினைவும்
அந்த குழந்தை நல்ல படியாக பிறந்து 

நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமே என்ற கவலையும் 
அதனால் ஏற்படும் இடர்களுமாகப் பலவித உணர்ச்சிகளை 
அடைய வைத்து விடுகிறான்...

தாயின் வயிறேனும் சுவர்க்க கமலத்தினின்று 
ஆசாபாசங்கள் நிறைத்த மண்ணிலே விழுந்தவுடன் 
எழுப்பும் ஒலி கேட்டவுடன் தாய் எல்லா நினைவுகளையுமே 
விட்டு விடுகிறாள்...

சூழ்நிலை...

காலம் சூழ்நிலையை படைக்கிறது
சூழ்நிலை இரும்பு மனதைக்கூட
மாற்றிவிடுகிறது...

சிலபேரின் உள்ளம்...

சிலபேரின் உள்ளம்
நடுக்கடல் போன்றது
அலை வீசாது
ஆனால்
அதன் அழத்தைக் கூறமுடியாது...

காதல்...

இன்று காதல் சுபாவமாகவும்
கண்ணீர் அதற்கு விலையாகவும் ஆகிவிட்டன
ஆனால் அந்தச் சுபாவத்திற்குத் தப்பியவர்கள்
சிலரும் உலகத்தில் இருக்கிறார்கள்

இயற்கையாகவே எந்தப் பெண்ணின்
நளினத்திற்கும் வசப்படாத மிகச் சிலரும் உண்டு...

ஆண் பெண்...

எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவள் விலகி விலகிச்
செல்லத்தான் ஆணுக்கு ஆசை அதிகமாகும்
வலிய வலிய வந்து ஒருத்தி மேலே விழுந்தால்
அவள் பேரழகியனாலும் வெறுப்பு தான் வரும்...
PAKEE Creation