Sunday, May 24, 2015

மூன்று வகை பேர்வழி...

காம இச்சையில் சிக்கியவன், வேதாந்தி , பைத்தியக்காரன்
ஆக மூவரையும் ஒரே தராசில் வைக்கலாம்
தன்னந் தனியாக பேசி , சிரித்து, அழுது
எல்லாம் தாங்களாகவே செய்து கொள்ளக் கூடியவர்கள்
உலகத்தில் இந்த மூன்று வகை பேர்வழிகள்தான்...

மனித இனம்...

எப்பேர்ப்பட்ட முக்கிய விஷயங்களையும்
இலகுவில் மறக்கும் தன்மை வாய்ந்த மனித இனம்
இன்பமான விஷயங்களை மட்டும்
இம்மியும் பிசகாமல் அணுஅணுவாக
நினைவில் இருந்திக் கொள்கிறது...

காதலினால் காவியங்கள்...

காதலினால் காவியங்கள்
எத்தனையோ படைத்து விட்டோம்
ஆனபின்னும் காதலினை
நாம் அறியத் தவறிவிட்டோம் - காதல்
காவியங்கள் அத்தனையும்
கானலைப்போல் விழல் நீராய்
கண்ணில்லா குருடர் முன்னே
ஓவியமாய் ஆயினவோ ! - காதல்
காவியங்கள் அனைத்தையுமே
இலக்கியமாய் ஆக்கிவிட்டோம்
இலக்கியமாய் ஆக்குதற்கா
காவியங்கள் நாம் படைத்தோம்...

மலர்களே...

மலர்களே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை
மறந்தும் நீங்கள்
மனிதர்களின் மொழியை
உச்சரித்து விடாதீர்கள்
ஏனெனில் அவை
வஞ்சனையும் சூழ்ச்சியும்
வெஞ்சினமும் கொண்டவை...

நான் புனிதமானவன்...

என் எண்ணங்கள்
என் கற்பனைகள்
என் சிந்தனைகள்
எல்லாமே என் உரிமைகள்

என்னை உங்கள்
காமப் பார்வைகளால்
கற்பழித்து விடாதீர்கள்

நான் புனிதமானவன்
என்னை இறுதிவரை
இப்படியே இருக்க விடுங்கள்...

தாய்...

மனிதர் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்
தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது
சாதாரண வாழ்விலும் சரி அதிஉயர் வழ்வாயினும் சரி
ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்
ஓர் இன்பஊற்று, கருணை வெள்ளம், அத்தியந்த பாசமழை...

இயற்கை...

வாழ்க்கையில் போதிக்கப்படுவது சில தான்
மற்றவை பிறக்கும் போது பிறக்கின்றது
வளரும் போது வளர்கிறது
இணையும் போது இணைகிறது
பாடம் சொல்ல எந்த புலவரும் தேவையில்லை
இயற்கை என்னும் புலவரைத் தவிர...

புரிந்துகொள்ளவே முடியாது...

உண்மையில் யாரும் யாரையும்
புரிந்துகொள்ளவே முடியாது
அவர்கள் அப்படி புரிந்துகொண்டார்கள் என்பதற்காக
அப்படி நடிக்க துவங்குகிறோம் அவ்வளவே...

பெண்கள்...

முதல் முதலாகத் தங்களுக்கு ஏற்படும்
ஆணின் ஸ்பரிசத்தைப்
பெண்கள் ஆயுள் உள்ளவரை மறப்பதே இல்லை...

கிராமங்கள்...

கிராமத்தை பல பேர் வெறுப்பாக பார்க்கிறார்கள்
"கிராமங்கள் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு"
இன்றைய தலைமுறைக்கு முதியோர்கள்
சொல்லாமல் விட்டு சென்ற உண்மை
நாகரிகத்தில் வாழ்கிறோம் வாழ்கிறோம் என்று
மது மாது இல் திளைத்து கொண்டிருக்கோம்...

ஆத்திரம்...

ஆத்திரம் ஓரளவுக்கு எல்லை கடந்து போகும் போது
மனிதன் செயலற்றவனாக இருந்தால்
ஆத்திரமே அழுகையாகி வரும்...

சிந்தனை...

தனிமை சிந்தனையை தூண்டுகிறது
அந்தச் சிந்தனை கடுகை ஆலமரமாக்கி விடுகிறது...

மேதை , பேதை...

மேதைக்கு முடியாதது எதுவுமில்லை
பேதைக்கு முடிந்தது எதுவுமில்லை...

சிருஷ்டி...

நாளைய வாழ்க்கை இதுதான் என்று
இன்றே தெரிந்து விட்டால்
மனிதர்கள் உஷாராகி விடுகிறார்கள்
மனிதர்கள் உஷாராகி விட்டால்
சிருஷ்டியின் படைப்பே செயலற்றுப் போகும்
ஆகவேதான் சில விஷயங்களை
சிருஷ்டி ரகசியமாக வைத்திருக்கிறது...

மக்கள்...

நாம் நாமக்காக வாழ்கிறோமே தவிர
மற்றவர்களுக்காக வாழவில்லை
ஊரிலே எல்லோரும் ஒரே மாதிரி இருந்துவிட்டால்
அரசாங்கங்கள் தேவை இல்லை
வகை வகையான மக்கள்
விதவிதமான நாக்குகள்
வாழ்ந்தாலும் பேசுவார்கள்
வாழாவிட்டாலும் பேசுவார்கள்...

தேவையில்லை...

விளம்பரதுக்குதான் வெளிச்சம் போட
வேண்டும்
வெளிச்சத்துக்கு யாரும்
விளம்பரம் போட தேவையில்லை...

Saturday, January 31, 2015

ஹீரோ...

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு
அவன் எத்தனை சாதாரணமானவனாய் இருந்தாலும்
"ஹீரோ" என்று ஒரு தனி ஜாதி கிடையாது
அவனவனுடைய வாழ்க்கையில் அவனவன் ஹீரோதான்...

மனிதனின் சிந்தனை...

காலகதி ஒரு மதிரியாக
ஒரே விதமாக
ஒரே அளவுடன் ஓடிக் கொண்டிருந்தாலும்
நேரத்தின் அனுபவம் மட்டும்
மனிதனுடைய
சிந்தனையைப் பொறுத்ததாகவே அமைகிறது...

மரக்கட்டை தேகம்...

நினைப்புதான்
உடலுக்கு உணர்ச்சியைக் கொடுக்கிறது
மற்ற சமயங்களில் தேகம் வெறும்
மரக்கட்டைதான்...

பெண்மை...

அனர்த்தத்தை விளைவிக்கும்
ஆண்மையின் முரட்டுத்தனம் கோபம் இவற்றுக்கு
அணை போட்டுத் தடுப்பது பெண்மை
அதுதான் சாந்தத்துக்கு அஸ்திவாரம்
வாழ்க்கைக்குப் பெண்மையின் உதவி
இன்றியமையாதது...

மனிதன்...

உடல்வெறி தணிந்து விட்டால்
மனிதன் நியாய அநியாயங்களை
எவ்வளவு நிதானமாகச் சிந்திக்கிறான்...

சந்தர்ப்பங்கள்...

பழைய வழிகள் அடைபடும்போது
புது வழிகளுக்கும் முறைகளுக்கும்
கோடி காட்டுவதும் சந்தர்ப்பங்கள்தான்...

நல்லுறுவு...

இருக்கும் இடம் சொல்லாமலும்
இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது
என்பதைப் பற்றி கவலைப்படாமலும்
உயிர் பெற்று நடமாடும் மரமாக இருப்பதே
நல்லுறுவு...

மனசு...


நாடு நாகரிகத்தில் திளைக்கிறது
செயற்கையை வளர்க்கிறது
இயற்கை வாழ்விலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்கிறது

காடு அப்பிடியில்லை
கட்டுப்பாடு இல்லை கேட்பார் இல்லை
இயற்கை கொடுக்கிறது உரம்
சுதத்திரம் அளிக்கிறது சூழ்நிலை
கவலையற்று வளர்கிறது காட்டுச்செடி
அதன் மலர்களுக்கு மனிதன் பறித்துவிடுவானே என்ற
அச்சமில்லை
அதனால் செழித்து வளர்ந்து மலர்ந்து
காற்றில் விளையாடுகிறது
இயற்கையோடவே வாழ விரும்புகிறது மனசு...

PAKEE Creation