Tuesday, October 28, 2014

ஞானிகள்...

மக்கள் அனைவரும் அயோக்கியர்களையே நம்புகிறார்கள்
அவர்கள் அப்பிடிதான் இருப்பார்கள்
இல்லை , அப்பிடியேதான் படைக்கபட்டிருக்கிறார்கள்
அதனால்தான் அவர்களுக்கு வழிகாட்ட ஞானிகள்
தேவைப்படுகிறார்கள்...

மரணம்...

மரணம் வெல்ல முடியாதென்பதை அறிந்தும்
மனிதர்கள் மரணத்தை எண்ணிக் கலங்குகிறார்கள்...

மானிட தர்மம்...

காலம் காலங்களாகப் போதிக்கப்பட்டும்
இன்னும் மானிட தர்மம்
போதனைக்குரியாதாகவே இருக்கிறது
வேதனைக்குரிய எதுவும் போதனைக்குரியதுதான்...

பணம்...

மனிதர்கள் தாங்களே பின்னிக்கொண்ட
சிலந்தி வலையில் தாங்களே சிக்கிக்கொண்டு
தவிப்பதற்குக் காரணம்
பணத்தின் மீது வைக்கும் ஆசைதான்...

இந்து சமுதாயம்...

கைக்கெட்டிய கனியானாலும் (பெண் , ஆண்)
கட்டுத் திட்டங்களுக்கு அடங்கியே அதைப் பறிக்க வேண்டுமென்ற நியதியை இந்து சமுதாயமும் அறக்கோட்படுகளும் ஏற்படுத்தியது
பெண்களுக்கும் ஆண்களுக்கும் எத்தனை சிறந்த பாதுகாப்பு
தமிழர் பண்பாட்டையும் இந்து மதச் சிறப்பையும் அது வகுத்த கட்டுப்பாடுகளில் நிலை பெற்றுள்ள கற்பின் திடத்தையும்
பலமுறை நினைத்து பூரிப்படைந்து இருக்கிறேன்...

காதல்...

காதல் தன் பலவீனத்தை காட்டிக்கொள்ள விரும்பாது
தான் நன்றாகவே இருப்பதாகவும்
எதையும் செய்துவிட முடியும் என்றும்
நிரூபிப்பதே காதலின் முதலம்சம்...

இதயம்...

இதயம் அவரவருக்கென்று
தனித்தனியாகப் படைக்கப்பட்டுவிட்டது
வேதனைகளைப் பரிமாறிக்கொள்ள முடியுமே தவிர
இன்னொருவருக்காகத் தாங்கிக்கொள்ள முடியாது...

கவலை...

கவலையின் அளவு கையளவாக
இருக்கும் வரை தான் கண்ணீருக்கும் வேலை
அது மலையளவாகும் போது
மனமும் மரத்துப்போகும்...

மலர்கள்...

மலர்கள் இறைவனுக்கும் மங்கையருக்கும்
மட்டுமே உரியவை
மனிதன் சடலமாகும்போதும் தான்
மலர்கள் அவனை அலங்கரிக்கலாம்
மணக்கோலமும் பிணக்கோலமுமே
மனிதன் மாலைகள் தாங்கும் கோலங்கள்...

தாய்‬...

நஞ்சை விட கொடியது ஏமாற்றும் பிள்ளைகளின் மனது
அதை புரிந்துகொள்ளாமல்
இதோ தனிமையில் கவலைகளை மறைத்து
கண்களில் கண்ணீரோடு வாழ்கிறேன்...

தாய்‬...

நடுத்தர வர்க்கம்...

இந்த நாட்டில் நடுத்தர வர்க்கம் என்பது
ஊசலாடும் பொம்மை
அது பணக்காரனைப் போல் நினைத்துக் கொண்டு
ஏழையாக வாழ்வது...

உலகத்தின் மரியாதை...

திரும்பத் திரும்பச் சிந்திக்கும் போது
உலகத்தில் நாம்தான் வாழத் தெரியாதவர்கள் என்று
எனக்குத் தோன்றுகிறது
இறைவன் உலகத்தைப் படைத்தபோதே
உலகத்தின் மரியாதையை
குணத்திலே வைக்கவில்லை
பொருளிலே வைத்து இருக்கிறார்...

சாதாரண அழகு...

நாம் மட்டும் பார்ப்பது
நமக்கு மட்டுமே சொந்தமானது என்று எண்ணும்போது
சாதாரண அழகு கூடப் பலமடங்கு பிரகாசிக்கும்...

மனிதன்...

தினசரி கணக்கற்ற மக்கள் கண்ணுக்கெதிரே மடிந்து
மயானம் செல்வதைக் கண்டாலும்
தன் வாழ்வு மட்டும் சதமென்று நினைத்து
பொய்யான மண்ணையும் பொன்னையும்
கட்டிக்கொண்டு இருக்கான் மனிதன்...

மக்கள்...

மக்கள் இன்று மதிப்பவனை நாளை மதிப்பதில்லை
மக்களுக்கு தீர்க்காலோசனை கிடையாது
அவ்வப்பொழுது தங்களுக்குக் கிடைக்கும்
நன்மை தீமைகளைப் பொறுத்து
அவர்கள் மதிப்பும் கசப்பும் மாறிவிடுகின்றன...

பணம்...

உலகத்தில் தாங்கள் பிறந்ததை எண்ணியே
சிலர் வருத்தப்படுவது நியாயம்தான்
இரக்கம் இல்லாதவனிடம் பணம் போய் சேருகிறது
பணம் இல்லாதவனை இரக்கம் பிடித்து ஆட்டுகிறது...

மறையும் பொருள்...

மறையும் பொருள் மீது
மனிதனுக்கு ஏற்படும் ஆசையும் மோகமும்
பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது...

கடவுளும் காலமும்...

கண்ணீர் ஓடிய கன்னங்களை
கடவுளும் காலமும் தான்
துடைத்தாக வேண்டும்...

அவரவர் நோக்கம்...

எது தவறு
எது தவறல்ல என்பது
அவரவர் நோக்கத்த்கைப் பொறுத்தது...
PAKEE Creation