Sunday, January 22, 2017

உதிரத்தில் இருப்பது சிவப்பு நிறம் மட்டுமல்ல...


இருளைச் சுவாசிக்கும் இதயங்களே
இங்கே விளக்குகள் மட்டுமா எரிகின்றன?
நாமும் தான்!
உடம்புகள் சாம்பலாகலாம்.
உணர்வுகளுமா?
கனவுகளை கைது செய்து
வாழ்க்கைச் சிறையில் அடைத்து
நினைவுகளைப் பிடித்து விடியல்களில் பூட்டினோம்
வாழ்க்கையே சிறையாகிட
நொண்டியான நினைவுகளால்
நாம் முடமாகினோம்
வேதனை ஓடைகளாக
மண்ணுக்கு சங்கமிக்க
கல்லறைக் கவிதைகளாக
நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்
எம்
இதயக்கதவுகள்
இழுத்து மூடப்பட
புதிய எண்ணங்களை
புதைகுழிக்குள் போட
நாமென்ன
அஃறிணைகளா?
ரகசியமாய் சுவாசிப்பதற்கும்
எம் இதயத்தின் சத்தம் எமக்கும்
கேட்காமலிருப்பதற்கும்
நாமென்ன மனிதர்களில்லையா?
நினைவுப் பூக்கள்
மனதில் மலர்வதற்கும்
கனவுத் தென்றல்
எம் வாழ்க்கைச் சோலையில்
நுழைவதற்கும்
அனுமதியா தேவை?
தோழர்களே
உதிரத்தில் இருப்பது
சிவப்பு நிறம் மட்டுமல்ல
எம் சந்ததியின்
சரித்திரமுந்தான்...

நீ மனிதன் என்பதை மறந்து விடாதே...

இதயத்தை புனிதமாக்கு
உனக்குள் ஒரு உதயம் உருவாகும்
நினைவுகளைப் புனிதமாக்கு
உனக்குள் ஒரு சுகம் பிரசவமாகும்
நீ செல்லும் பாதை நேரானதாஎன்பதை ஆராய்ந்து பார்
காலத்தை வெல்லும் மனிதனாக
வாழ்ந்தால் பார்போற்ற நிலைப்பாய்
உன் சொல்லில் கல்லும் கரையும்
நீ மனிதன் என்பதை மறந்து விடாதே...

அழியாத பாடங்கள்...

நான் காற்றோடு பறந்த
ஓர் வெள்ளைக் காகிதம்

தாலாட்டின் சுகம் காண
மெலெழுந்தேன்! அலைந்தேன்!

இதோ நான்
மீண்டும் தரையில்

எடுத்து வாசியுங்கள்
என்னில் வாசகங்கள்

அவை காலத்தாயின்
அழியாத பாடங்கள்...

உண்மை இதுதான்...

நாம் வாழுற உலகம்
நல்லது தான் ஆனால்
நாறிப் போன ஆசையினாலே
நாறுது உலகம்

உருண்ட உலகம் ஒழுங்காக சுத்துது
அதிலை உடமை இருக்கிறவனுக்கும்
இல்லாதவனுக்கும்
நடக்குது இழுபறி

கணக்கை மீறித் தின்னுறான் ஒருவன்
காலி வயித்தை காயப்போடுகிறான் இன்னொருவன்

மாடி வீடு கட்டி ஒரு கூட்டம்
கோடி சுகம் அனுபவிக்க
குடிசை வீடும் இல்லாம
வீதியிலே கிடந்து வாழுற கூட்டம் பலது

உலகம் எல்லொருக்கும் பொது
உண்மை இதுதான்
இதை உணர்ந்து நாம
உருவாக்கிற வரைக்கும்
இந்த நிலைமை தான்...

வாழ்விற்கான போராட்டம்...

மரணங்கள் மதிப்புள்ளவை
தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை
மரணங்கள் என்றும் மனிதனின் தேவையை அழித்து விடுவதில்லை
மரணம் மனிதனின் கருத்தை உருக்குலைத்து விடுவதில்லை
கருத்துக்கள் என்றும் ஆய்வுக்குரியவை
கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட வேண்டியவை
செயற்பாடுகள் விமர்சிக்கப்பட வேண்டியவை
மனிதன் ஒருவன் வீணே மாய்ந்தான் எனின்
மனித வரலாற்றில் அது நிராகரிக்கப்படும்
மனிதனின் சுதந்திர வாழ்விற்கு இடையூறுகள் தொடரும்வரை
வாழ்விற்கான போராட்டம் தொடரவே செய்யும்...

இதயத்தில் துயரம் இல்லை...

துணிவான இதயத்தில் துயரம் இல்லை
சலியாத உழைப்பில் அலுப்பு இல்லை
கவலை இன்றி உலகத்திலே மனிதன் இல்லை
நீயே தான் உன் சோகங்களை கேட்டுக்கொள்
வாழ்க்கை என்னும் கண்ணீரை உன் கையால் துடை
பல விசயங்கள் புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை...

இறைவனைத் தேடு...

நிலையற்ற இகவாழ்வை நிலையென்று எண்ணி
நிரையாகச் செல்வங்களைச் சேர்க்கின்ற மனிதா
விலையான வாழ்வு விழுந்திடலாம் நாளை
விடமாக மரணம் விரைந்திட்ட வேளை
குலையாத புசிப்பும் குடிப்புமல்ல வாழ்வு
குவலயத்தை படைத்திட்ட பரமனிடம் கேளு

பிறந்தது போன்றே இறந்திடும் தேகம்
பெற்றிட்ட செல்வத்தை பற்றவது இல்லை
உண்ணவும் உடுக்கவும் உன்னிடம் இருந்தால்
உள்ளத்திலே திருப்தியெனும் பொன்னையே நாடு
மண்ணிலே தேகம் மறைந்திட முன்னே
மாயையை நீக்கும் இறைவனைத் தேடு...

இளைஞர்களே...

நீங்கள் நட்சத்திரங்களில் ஊஞ்சல் கட்டி 
அங்கு நடைபோடும் முகில்களை உதைப்பவர்கள்
பட்டாசு இடியின் பக்கத்தில் படுத்துறங்குபவர்கள்
விட்டால் போதும் விண்ணில் ஏறிக் குதிப்பீர்கள்

துள்ளி விளையாடுவது மட்டும் துணிவல்ல
சமுதாயச் சந்தையில் சத்தமிடும் சனங்களுக்கு
விலை பேசித் தீர்த்து விடும்
விடயங்கள் பல உங்களிடம் தான்

மெல்லிய மனசும்
வலிய கரங்களும்
திடமான அறிவும்
திகைக்காத வழியும் தேடுங்கள்
இளைஞர் என்னும் போது
இனிமை பொங்க வேண்டும்
சமுதாயம் உங்களின்
புகழ் பாட வேண்டும்...

எனது புன்னகை...

யார் யாரோ வந்து போகிறார்கள்
எனது மாயத்திரைக்கு
எப்போதுமே கண்டிராத
அவர்களது முகங்கள்
வீசிவிட்டுச் செல்லும் புன்னைகையினை
வாங்கிகொண்டபின்
எனது புன்னகையைப் பதிலாக
அளித்திருக்கிறேன்
வெறும் சம்பிரதாயமாக
பரிமாற்றப்படும் புன்னகை
வெறுமையாய்
உதிர்ந்து விடுகிறது மண்ணில்...

எனக்குள் என்ன இருக்கிறது...


எனக்குள் என்ன இருக்கிறது
கனக்கும் ஆசைகள் சுமந்த இதயமும்
கண்டதையும் நினைக்கும் மனமும் தவிர
வேறு என்ன இருக்கிறது எனக்குள்?

கூர்ப்பு விதிப்படி நனொரு விலங்கு
முன்னர் குறித்த முறைப்படி நானெனில் தெய்வம்
மனிதனாய் இருப்பதே எனது விருப்பம்

உள்ளிருந்து வருகிறதாம் ஞானம்
யாரோ சொல்லி வைத்தார்
வெளியிலிருந்து வந்து உள்ளைத் தாக்கி
மீண்டும் புதிதாய் வெளிச்செல்வதே
உண்மை ஞானம் கண்டு தெளிந்தது என் மனம்

உள்ளும் வெளியும் கலந்தியங்கிறது உலகம்
உள்ளிருந்து வெளியும் வெளியிருந்து உள்ளும்
பிரிகையிலே முடிகிறது பயணம்...

பிறப்பே வேண்டாம்...

இனியொரு பிறவியெனில்
கண்கள் வேண்டாம்
காதுகள் வேண்டாம்
நாவும் நரம்பும் வேண்டாம்
மூளையும் முகமும் வேண்டாம்
முண்டமே போதும்
அதுவும்....?
பிறப்பே வேண்டாம்
பிறப்பினும் இங்கு வேண்டாம்...

சொந்த மண்...

கல்லை உடைத்து
களனிகள் படைத்து
செழிப்பக்கினோம் மண்ணை
இன்று!
இடம் பெயர்ந்து
வளம் இழந்து
செழிப்பிழந்து
நாதியற்று ஏதிலிகளாய்
சொந்த மண்ணில்
சொந்தமாய் தொழில் செய்து
ஒரு நேரம் உண்டாலும்
உரிமையோடு உண்டதில்
கண்ட மகிழ்ச்சிக்கு அளவேது...

குளத்து நீர்...

தனது பிம்பத்தை
நீரில் நிலைநாட்டச் சந்திரனுக்கு ஆசையில்லை
அந்தப் பிம்பத்தைப்
பிடிக்கவேண்டுமென்று குளமும்
வில்லங்கப்படுவது கிடையாது
எவ்வளவு அமைதியாக இருக்கிறது
குளத்து நீர்...

காலத்தின் கோலம்...

பாவச் செயல் புரிந்து
பணம் சம்பாதிப்பதற்கும்
ஞான மார்க்கத்தின்
நல்லறிவை எதிர்ப்பதற்கும்
ஈனச் செயல் புரிந்து
இறைவனடி மறந்ததற்கும்
காரணமென்ன வென்றால்
காலத்தின் கோலந்தான்...

அஞ்சிடும் உள்ளம் இருட்டு போன்றது...

வசந்தமில்லா வாழ்வும்
வரவில்லா செலவும்
உயர்வில்லா உணர்வும்
உன் நிலை போன்றது
சிந்தனையில்லா மனமே
சாதிக்க நினைக்காத உனதுள்ளம்
சரமாய்தொடுக்கவஞ்சிய மலர் போன்றது
எண்ணங்கள் இல்லாத உனதுள்ளம்
எற்றிடாத தீபம் போன்றது
அஞ்சிடும் உன் உள்ளம்
அகன்றிடாத இருட்டு போன்றது...

ஆசை...

இருப்பதை இழந்து
பறப்பதை பற்றும்
உங்கள் ஆசை
சிறகொடிந்த பட்சியின்
கனவுகளின் கதியாகும் - இதை
சிந்தனைசெய்யா உள்மனமும்
நிர்க்கதியாகும்
மழைகாணாத நிலமும்
சிந்தனையற்ற உளமும்
ஒன்றுதான்...

அது ஒரு காலம்...

வாழ்க்கை மகிழ்வென இருந்தேன்
வாழ்வில் உயர்வென நினைத்தேன்
மனதில் பல எண்ணங்கள் வளர்த்தேன்
அதை தாளிலே வண்ணமாக வரைந்தேன்
காலம் என்னை விடாது
துன்பம் என்னை நாடாது
என்றெல்லாம் எண்ணியிருந்தது
அது ஒரு காலம்...

மனிதனின் மூன்றெழுத்து வாழ்க்கை வட்டம்...


மனிதன்"அன்னை"என்னும் மூன்றெழுத்து
உயிரினூடாக பிறந்து
"பிள்ளை"என்னும் மூன்றெழுத்தால் வேறாகி
"இளமை"என்னும் மூன்றெழுத்தால் இளவயதில் கால்பதித்து
"காதல்"என்னும் மூன்றெழுத்து வலைக்குள்ளே சிக்கி மணம் புரிந்து
"பிள்ளை"என்னும் மூன்றெழுத்து செல்வத்தை பெற்று 
"முதுமை"என்னும் மூன்றெழுத்து பருவத்தை எட்டி
"உடல்"என்னும் மூன்றெழுத்திலிருந்து
"உயிர்"என்னும் மூன்றெழுத்து பிரிய
"சுடலை"என்னும் மூன்றெழுத்தை நோக்கி உடல் பயணமாகிறது இவ்வாறு "வாழ்வு"என்னும் மூன்றெழுத்தின் பயணம் நிறைவு பெறுகிறது...

பேனாமுனை...


உலகிலே கூர்மை எது என்றேன்
விழி வீச்சு என்றது பெண்மனது
வாள் வீச்சு என்றது போர்முனை
சொல் வீச்சு என்றது கவி மனது
அதைக் கேட்டு முறுவலித்தது
நான் அல்ல 
எனது பேனாமுனை...

மது...

மனிதனின் சுக துக்கங்களை நிர்ணயிப்பதற்கு
கடவுள் இருக்கின்றானோ இல்லையோ
மது இருக்கிறது
அது பல விசயங்களை மூடி வைத்திருக்கிறது
சில சமயங்களில் 
மனதிலுள்ள திறக்க கூடாத அறையைத் திறந்து விடுகிறது
குடித்தவனிடம் அந்தரங்கம் இல்லை
அவன் இதயம் ஊருணித் தண்ணீர்...

பூரண அமைதியோடு இருங்கள்...

நீங்கள் புத்தனாக இருந்தால் என்ன?
கிறிஸ்தவனாக இருந்தால் என்ன?
முஸ்லிமாக இருந்தால் என்ன?
சைவனாக இருந்தால் தான் என்ன?
பூரண அமைதியோடு இருங்கள்
அது தான் முக்கியம்
இறைவனை விட்டு விட்டு மதத்தை பிடித்துக் கொண்டால்
இறைவனும் தெரியாது
உங்கள் மதமும் உணராது
உங்கள் மதத்துக்குள் நீங்களே பிளவுகள் உண்டாக்கி,
நீங்கள் இரண்டாக பிளந்து
உங்களை அடித்து கொண்டு மரணம் அடைகிறீர்கள்...

என் தன்னம்பிக்கைக்கு புதைகுழி வேண்டாம்...


தவறுகள்தான் செய்வேன் என்று
எவருக்கும் நான் ஒப்பந்தம் செய்யவில்லை
ஒட்டப்பந்தயத்தில் தடுக்கி விழுவேன்
என்று எதிர்பார்க்காத
போட்டியாளந்தான் நானும்

என் தோல்விகளுக்கு பரிசு கேட்டு
நான் அழவில்லை

ஆனால் என் தன்னம்பிக்கைக்கு
புதைகுழி வேண்டாம்
என்றுதான் கதறுகிறேன்...

நண்பனே...


உன்னில் உனக்கு நம்பிக்கை உண்டெனில்
உன்னால் எதையும் செய்ய முடியும்
உண்பதும் உடுப்பதும் வாழ்வென்று கொண்டவர்
வாழ்ந்ததாய் எந்தப் பதிவுமில்லை
தின்றதும் குடித்ததும் திரிந்ததும்
அறிமுகக் குறிப்பல்ல என்பதைத் தெரிந்து கொள் நீ
தினந்தினம் வாழ்ந்ததைப் பதிந்திட முடிந்ததைச் செய்
உன்னை எதிர்காலம் தெரிந்துகொள்ளும்...

சமாதானம்...

சமாதானத்தை
எதிர்பார்க்கிறார்கள்
சனங்கள்
சனங்களை
எதிர்பார்க்கின்றன
சவப்பெட்டிகள்

சமாதானம் என்பது
சவப்பெட்டியில் தானா
எனக் கேட்கிறது
மனமும்...

என்னவள்...


விண்ணகத்து நிலா மண்ணகத்து உலா வந்ததோ

அவளுடைய கருங்கூத்தல்
கார்மேகம் போல இருந்தது
ஆனால் அந்தக் கார் மேகத்தினால் அந்தக் கட்டழகு நிலவின் கவர்ச்சியான எழிலை மறைக்க முடியவில்லை அதற்கு பதில் அவளது அழகை அதிகப்படுத்திக் காட்டியது
நீண்டக்கூந்தல்,நீலக்கடல் அலைபோல நெளிந்து நெளிந்து இருக்கிறது

அவளுடைய நெற்றியைப் பிறை நிலவு என்று கூறலாம்
ஆனால் பிறைநிலவையும்,முழுநிலவையும்
ஒரே நேரத்தில் காணமுடியுமா?
அவளுடைய பளிங்கு முகம் பால் நிலவு போல் அல்லவா இருக்கிறது
அந்த வட்ட முகம் வளர்ந்த நிலவுபோல் அல்லவா தோன்றுகிறது
வள்ர்பிறையும் வளர்ந்த நிலவும்
ஒரே வானில் ஒ... ஒ... அதிசயம்

மின்னாட்டம் பூச்சியைப் போல மின்னிக்கொண்டு இருந்த அவள் கண்கள்
நட்சந்திரங்களைப் போல இருந்தன
ஒளியிலே நட்சத்திரம் என்றால்
ஒடி விளையாடுவதில் மீன்
உருவத்திலே மான்
கரும்பு போன்ற புருவங்கள் கரையாக இல்லாவிட்டால்
அந்த மீன்விழிகள்
மான் குட்டிகளைப் போல் துள்ளி ஓடிவிடும்
தேன் உண்ட கருவண்டு விழிகள் பறந்துவிடும்
பாய்வதிலே மீன் என்றாலும்
பார்வையிலே மானின் மிரட்சி

மான் கொம்பு போல நீண்ட மூக்கு
அதை மலர்க்கொத்து என்றாலும்
பொருத்தமாகத்தான் இருக்கும்

கன்னங்கள் காட்டு மலர்களைப் போல
செவ்வரளியின் சிவப்பு போன்றது அந்தக் கன்னங்கள்

நான் இல்லையா? என்று தேன்கனி போன்ற மாங்கனி சண்டைக்கு வரக்கூடும்
மங்கையின் கன்னக் கதுப்புகள் வண்டுபுகாத மம்பழத்துண்டுகள்

ஒ... அவள் உதடுகளோ தேன் கிண்ணத்தின் விளிம்புகள்
அல்லி இதழ்கள்
அமுத ஆறு
அழகிய முத்துச்சிப்பியின் கூறு

பற்களை பச்சரிசி என்பதா
படாத முல்லைச்சரம் என்பதா?
எப்பிடிச் சொன்னாலும் தகும்
அவ்வளவு எழில் படைத்தவை

அவளுடைய சிற்றிடை
வல்லிக்கொடியோ
அல்லிக்கொடி என்றால்தான் என்ன குறை நூலிடை என்றாலும் மாலிடை
தாங்கும் மங்கைக்கு மேலிடை
ஒரு பொருட்டு அல்ல

என்னவளின் நங்கைக்கு வெண்மேக உடைதான் பொருத்தமாக இருக்கும்
ஆனால் அவளோ சாதாரண உடைதான் அணிவாள்
ஆனாலும் அவளது அழகு குறைந்துவிடவில்லை.

காட்டுக் கொடியிலும் மலர்ந்தாலும்
பூ அழகாகத்தானே இருக்கிறது
அதே போல் தான் என்னவளும்

இயற்கையின் தேவதை...

எனது எதிரி நானே...


எனது எதிரியை
நான் சரியா தேர்வுச் செய்யும்
கலையினை கற்றுத்தா
என்னை எதிர்ப்பவரெல்லாம்
எனது எதிரிகளல்ல
என்பதனை கற்றுத்தா
எனது சிந்தனைகளை
தெரிந்தோ தெரியாமலோ
அறிந்தோ அறியாமலோ
புரிந்தோ புரியாமலோ
ஏற்றுக்கொள்ளாதவரெல்லாம்
எனது எதிரிகளல்ல
என்பதனை கற்றுத்தா
என்னை ஆதரிக்காதவர்கள்
என்னை ஆற்றுப்படுத்தாதவர்கள்
என்னை ஆரவாரிக்காதவர்கள்
என்னை ஆசிர்வாதிக்காதவர்கள்
இவர்கள் அல்ல. மறாக
அடிப்படையில்
எனது எதிரி நானே என்பதனை
அறுதியுடன்
ஆய்ந்தறிந்து தேர்வுக்கொள்ளும்
அனுபவங்களை
அதிகமாகவே தா...

Wednesday, January 18, 2017

ஆசை...

இங்க ஒவ்வொருவரும் தன் மனச்சாட்சிக்காக நல்லவர்களாக
இருக்க வேண்டும் என்பதை விடத்
தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக
நிரூபித்துக் கொண்டால் போதும்
என்ற ஆசைதான் இன்று மிகப்
பலரிடம் இருக்கிறது...

இயற்கையின் நியதி...


வண்டினை நாடி மலர்கள் சென்றதாய்
சரிந்திரம் உண்டா?
ஒத்த முனைகள் காந்தம்
தன்னில் ஓட்டியதுண்டா?

மயிலில் பெண்ணினம்
தொகை விரித்து ஆடியதுண்டா?
பெண் குயில் என்றும் ஆண் குயிலை
கூவி அழைத்ததுண்டா?

இவை இயற்கையின் விதிகள் புரிகிறதா? - ஆணே
பெண்ணை தேடி வருவதும்
அடிமை என்று தன்னை நினைப்பதும்
ஏவல் வேலை புரிந்து நிற்பதும்
"எஜமானி" என்று அவளை நினைப்பதும்
காத்திருத்து தாடி வளர்ப்பதும் - தோற்றால்
மதுவை நாடிச் செல்வதும்

ஆணே!
இயற்கையின் நியதியை மீற முடிந்தால்...

மாற்றிக்கொள்ளுங்கள் - உங்களை
தேடி பெண்களே நாடி வரச் செய்யுங்கள்!
அடிமை என்னும் மடமை எண்ணம்
விட்டுத் தள்ளுங்கள்

தாடியும் மதுவும் வேண்டாம்
என்று சத்தியம் செய்யுங்கள்
புத்தம் புதிய யுகத்தை அமைத்து
நிமிர்ந்து நில்லுங்கள்

மாற்றம் உண்டா - இயற்கை
விதியில் மாற்றம் உண்டா
மாற்ற முடிந்தால் மாற்றுங்கள்
இல்லை
உங்களை நீங்களே தேற்றுங்கள்...

சுற்றம்...

பொன் பொருள் உள்ளவரை கூடவரும்
இல்லாத வேளை எட்டி உதிக்கும்
நேருக்கு நேரானால் வாரியணைக்கும்
காணாத போது புறம் கூறும்
உதவி வேண்டி உருகி நிற்கும்
தேவை முடிந்தால் மறந்து போகும்
வாழ்வில் இயன்றவரை பிரிந்திருக்கும்
மரணத்தினால் சிலசமயம் இணைந்திருக்கும்
இதுதான் நம்மளை சுற்றி இருக்கும் சுற்றம்...

அறிவைப் பாவித்து மனதை வளர்ப்போம்...


பொதுவாக மனித மனம்
கிடைக்காத ஒன்றுக்காகவும்
இழந்துவிட்டவைக்காகவுமே
ஏங்கிக்கொண்டிருக்கிருப்பதும்
அவற்றை நினைத்து சோகத்திலிருப்பதுமே வழக்கம்.

கிடைத்திருப்பதையும் அதன் மதிப்பையும் உயர்வையும்
எண்ணிப் பார்க்கத் தவறியும் விடுகின்றது.

அதே மனம்
எப்போதும் தனக்கு மேலே உள்ள விடயங்களைப்
பார்த்து ஆசை கொண்டு
அதனால் கவலையை தேடிக்கொண்டுதான் இருக்கின்றதே ஒழிய.

தனக்கு கிடைத்ததையும்
தனக்கும் கீழே இருப்பவர்களின்
நிலையையும் எண்ணிப்பார்க்க மறுத்து விடுகின்றது.

இதுதான் மனித மனம்.
இதை வென்றவன் மகாத்மா ஆகின்றான்.
நாம் மகாத்மாக்கள் அல்லவே.
அதனால்தான் ஒவ்வொரு விடயத்திற்கும் சோகித்திருக்கின்றோம்.

அறிவைப் பாவித்து மனதை வளர்ப்போம்...

என் விதி...


ஒரு சாரம் மட்டும் கட்டிக்கொண்டு
சுதத்திரமாகத் திரித்த எமக்கு
இன்று ஒன்றுக்கு ஐந்து உடை போடும் சுமைகள்
வின்ரரில் கடும் குளிர் , சமரில் எரிக்கும் வெயில்
எமது நாடு சொர்க்க பூமி
என்றுதான் அதைப் பார்ப்பேன்? ஏங்குகின்றேன்
தென்னை, பனை, புழுதியில் புரளும் நாய்கள் ,
பூவரசு மரத்துக் குயில்
எல்லாவற்றையும் பிரிந்து விட்டு
என்னை இங்கு வாட வைத்ததே என் விதி...

யாருடன் நான் இசைந்துபோவது...


அம்மாவில் கொஞ்சம் மனைவியிடம்
நண்பனில் கொஞ்சம் தம்பியிடம்
அக்காவில் கொஞ்சம் காதலியிடம்
இப்படி... எல்லோரும் எல்லாமே
கலந்து - இசைந்து திரிகிறோம்
இவ்வாறெனில்
யாருடன் நான் முரண்படுவது
யாருடன் நான் இசைந்துபோவது...

என்மனம் வாழ்வை அறியும்...


சுதத்திரமாய் வாழ்க்கையை அனுபவித்து
வாழ்க்கையின் போக்கில் வாழ்வை ரசித்து
பின் அலையின் குமிழியாய் நானும் மிதந்து
வானில் துண்டு முகில்போல் அலைந்து
பிரான்ஸ் வீதி ஒரத்து நிழல்களில்
நேரம் மறந்து நடந்து திரிந்து
ஒவ்வொர் பனித்துளிகளிலும் நானும் நனைந்து
பனியின் பாசை அறிந்து
வாழ்வின் மர்மம் கண்டு
உலகின் வஞ்சகம் ஊடறுத்துணர்ந்து
எப்போது உள்மனம் அழுகிறதோ
அப்போது என்மனம் வாழ்வை அறியும்...

வாழ்க்கை...


சூன்யமாகி பட்டுப்போன
வாழ்க்கை காட்டில்
அடிக்கடி தீ வைக்கும்
கொடூரங்களும்
குறைந்த பாடில்லை

கடலது சுமையென்று
கண்ணீர் சிந்தினால்
பூமியின் பாரம்
குறைந்து விடவா போகின்றது

அத்தனை வலிகளை பற்றி
அப்பட்டமாய் எழுதியும்
என் அவலத்திற்கு
இதுவரை
விளம்பர எடுத்துக்காட்டைத் தவிர
வேறொன்றுமே
கிடைத்ததில்லை...

சீதனம்...


காலத்தின் மீது கள்ளச்சாட்டு சொல்லி
கைக்கூலி, சீதனத்தை
கட்டாயமாக்கி விட்டார்கள்
இரக்கமில்லாத இன்றைய மனிதர்கள்

திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது என்பது பொய்
ரொக்கத்தால் ஒத்திவைக்கப்படுகிறது என்பதே மெய்

அடிமையாய் தனை அடகுவைத்து
ஒரு துணைக்கு விலை தேடும் துயரம்
எனக்கு பின்னாகிலும் இல்லாதொழியாதா?...

போலி மூகமுடி...


எனக்கெதற்கு
இந்தப் போலி முகத்திரை
உயிரற்றுச் சுவாசிக்கவும்
உதட்டுச் சிரிப்புடன் வாழவும்
எனக்குப் பிடிக்கவில்லை

பார்த்தும் பாராதிருக்க
நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை
நடக்கச் சக்தியிருந்தும்
நடைபிணமாக
எனக்கொன்றும் நடந்துவிடவில்லை

எனக்கு வேண்டியவை
உரத்த சுவாசங்கள்
காற்றையும் உலுக்கும் வார்த்தைகள்
கனவுகளைச் சுமக்காத கண்கள்
சூரியனைச் எட்டிப்பிடிக்க ஓடும்
என் கால்கள்

என் நம்பிக்கை வானிற்கு இவை போதும்
என் விடுதலை வேட்கைக்கு
வேண்டாம் இந்தப் போலி மூகமுடி

பழைய வேதாந்தத் திரையைக்
கிழித்து வெளிவந்து
நிர்வாணமாக
என்னை நானாகப் பார்க்கப் பிரியப்படுகிறேன்...

என் அழகிய நாடே...


என் அழகிய நாடே
நீ இப்போது
எப்படியிருக்கிறாய்?

அந்நியனின்
ஆயுதங்களுக்கு
அஞ்சியா இருக்கின்றாய்?

நான் நடந்து திரியும்
அந்த மணல் பாதைகளில் இனவெறியர்
இரவு பகலாய் அலைகிறார்களாம்
மெய்யா?

என் இதயத்துள் இளமைப் பாடம்
நடாத்திய
அந்தப் பச்சை வயல் வெளிகளில்
நெருஞ்சியா பூத்திருக்கிறது?

எனக்கு தெரியும்
மனிதன் விரட்டப்படும் போது
மிருகம் சிரிக்குமென்று
எனக்குத் தெரியும்

ஒரே நாளில்
ஓடி வந்தவர்களெல்லாம்
உட்கார்த்திருக்கவில்லை

என் கனவு இதுதான்
மீண்டும்
என் கிராமத்தின் மடியில்
நான் தலை வைத்து
உறங்க வேண்டும்

திசையற்றுத் திரியும்
என் தோழர்களைத்
தொட்டுக்கொள்ள வேண்டும்...

எனக்கொரு ஆசை இருக்கிறது...


அன்பே
நிலா முற்றத்திலே
மார்பிலே சார்த்தி உன்
தலைமுடி கோதி
உச்சந்தலை மீது முத்தம் கொடுக்க வேண்டும்
ஆயிரமாயிரம் கிள்ளை மொழியில்
கொஞ்சி கதை பேசவேண்டும்
பறவைகளின் தாலாட்டில்
புல்லின் நுனியில் நாம் உறங்க வேண்டும்...

மாவீரம், தியாகம்...

மாவீரம், தியாகம் போன்ற பெரிய சொற்கள் எல்லாம்
யுத்தத்தின் யதார்த்தத்திலும் இடிபாடுகளுக்கிடையிலும்
சோகத்திலும், இழப்புகளின் கொடூரத்திலும்
கலாசாரமற்ற இதயங்களிலும்
அர்த்தம் இழந்து போய் விடுகின்றன...

பாரதி காந்தி புத்தர்...

பாரதியும் காந்தியும் புத்தரும்
இங்கே
பிறந்தது மட்டுமல்ல
இறந்ததுவும் தான்
பாறங்ககல்லில்
நாரை உரித்து உரித்தே
தங்களுக்குரிய தண்டனைகளைத்
தாங்களே நிறைவேற்றிக்கொண்ட
அமானுஷ்யங்கள்...

நல்ல மனைவி...

ஒரு நல்ல மனைவி
கணவனைப் பொறுத்த வரையில்
சில விஷயங்களில் குருடாகவும்,
சில விஷயங்களில் செவிடாகவும்,
சில விஷயங்களில் ஊமையாகவும்
இருக்க வேண்டும்...

வாழ்க்கை ஒரு போராட்டம்...

வாழ்க்கை ஒரு போராட்டம்
ஆமாம்
அது சாவிற்கான போராட்டம்
பரிதாபங்களின் பேருருவம்
சிக்கல்களின் வலைப்பின்னல்
நனவுகளின் கனவுநிலை...

மனிதர்களிடம் தேடினேன்...

மனித உறவுகள்
உலகெல்லாம் தேடினேன்
இதுவரை
ஒன்றேனும் காணவில்லை
மனிதர்களெனும் பெயரில்
நடமாடும் மிருகங்களை
நாள்தோறும் காண்கிறேன்
தூய உறவுகள்
மனிதர்களிடம் தேடினேன்
மனித மிருகங்களிடம்
தூய உறவை மட்டும்
எப்பிடிக் காண்பது...
PAKEE Creation