Thursday, May 28, 2020

நிரந்தரமாய் தங்க அல்ல...



ஒன்றும் கொண்டு வரமாட்டேன் என்று
கைகளை இறுக்கி மூடியபடி பிறக்கும் குழந்தை

மனிதன் ஒன்றையும் எடுத்துச் செல்லமாட்டேன்
என்று விரல்களை விரித்தபடி

கடைசிப் பயணத்தை தொடர்கிறான்
உலகத்தில் உள்ளதெல்லாம் உலகத்துக்காகவே
இங்கு வந்துபோகமட்டும் உயிர்களுக்கு
உரிமை உண்டு
நிரந்தரமாய் தங்க அல்ல...

காதலி நீ என்னோடிருந்தால்...


காதலி நீ என்னோடிருந்தால்
நிலவைப் பெயர்த்து
உன் முகத்திற்கு
மஞ்சள் பூசுவேன்
மின்னும் தாரகை எடுத்து
உந்தன்
சேலைக்கு
வண்ணந்தீட்டுவேன்
வான நீலத்தை உறிஞ்சி
உந்தன் விழிக்குள் விட்டு
அழகு பார்ப்பேன்
வளைந்த மேகத்தை பிடித்துப்
உந்தன் தேகத்தில்
ஒட்டிவைப்பேன்
சுட்டெரிக்கும் சூரியனை
தொட்டெடுத்து
உந்தன் கூந்தலுக்குள்
செருகி படம் பிடிப்பேன்
விலகிச் செல்லும்
நிழலைப் பிடித்து
உனக்கு குடை பிடிப்பேன்...

திருப்தியற்ற மனது...




அம்மாவின் முலையைச் சப்பிச்சப்பி
உறிஞ்சிய பால் ஜீரணித்து இரத்தமாகி
இளைஞனாகி
மார்புநிமிர்ந்த பெண்மையில் மயங்கி
மார்புதைந்து
பாலும் பழமும் பவளவாயும் என்று ருசித்து ருசித்து
அன்னை முலை தந்த அப்பாலில் தொடங்கி
இறுதி நேரத்தில் புகட்டப்படும் இப்பால் வரையில்
எத்தனை பால்..?
ஆண்பால் பெண்பாலாய் பாலியல் படித்து
திருப்தியாயிற்றா மனது..?
இல்லையே...

எந்தக் காலத்தில் வாழ்கிறோம்..?



எந்தக் காலத்தில்
வாழ்கிறோம்?
நெருப்பைத் தின்று
உஷ்ணங்களை
ஏப்பமாய்விடும் காலம்
ஒன்றிலா?
எச்சரிக்கை நினைவுகளும்
இருட்டடிப்புக்களும்
எங்கள் மூளையை
உரசும்
ஒரு
இறுகியா காலத்தின்
ஓரத்திலா..?

வாழ்ந்த காலங்கள்...


அன்னை மடிதனில்
தலை சாய்ந்த நாள்தனையும்
நிலாக் காட்டி அன்னமூட்டிய
ஆனந்த காலங்களையும்
அழகாக எண்ணுகிறேன்

ஆலயம் தொழ
அழகாகச் சென்ற
அரிய பக்தி நாட்களையும்
ஆனந்தமாய் ஆடி ஓடிய
ஆவேச நாட்களையும்
ஆர்ப்பரித்து எண்ணுகிறேன்
அங்காடி வேளையில்
ஆனந்தமானந்தமாய்
ஊரளந்த ஊதாரித் தனத்தையும்
உற்று நோக்குகிறேன் இன்னும்

நரகத்தில் நாமிங்கு
சொகுசாக வாழ்ந்தாலும்
அங்கு சொந்தங்கள் கூடி
சொற்பணமாய் வாழ்ந்த காலங்களை
சொல்லியெடுக்க முடியுமா..?

உன் வரவு...




வசந்தங்கள் பாடும்
வைகறை ஓரத்தில்
உன் வரவுக்காக
விழி வைத்துக் காத்திருந்தேன்

வந்தது வசந்தமா?
என் வருங்காலமா
புரியவில்லை எனக்கு
நீ வந்த வரவு

வானத்தை கிழித்து
வானவில் வந்தது போல
வானளவு வியக்க வைத்தது
உன் வசந்த வரவு...

காயங்கள் காயவில்லையடி...



மெலிந்த ஒட்டகையின்
பயணத்திலும் - மணற்
புயலின் வலியிலும் - இங்கே
தணலாய்த் தகிக்கும்
வெய்யிலிலும் கூட - என்
காதல் காயங்கள்
காயவில்லையடி...
PAKEE Creation