Tuesday, May 24, 2022

மனிதன்...


பட்டுப் புழுவைப்
போன்றவன் மனிதன்
அது
தன் கூட்டைக் கட்டுகிறது
அதற்குள்ளேயே
துயரத்தோடு செத்து விடுகிறது...

தனிமரமானேன்...


வெயிலுக்குப் பயந்து
பதுங்கிக் கொள்ளும் பனித்துளி போல்
உன் நினைவுக்குள் ஒழிந்தே வாழ்கின்றேன் நான்
விண்ணுலகில் காணாத உன் தரிசனத்தை
மறைத்தே வைத்துள்ளாய்
எனைத் தொடரும் என் நிழல் போல
உனைச் சுமந்தபடியே தனிமரமானேன்...

கண்ணீர்...



ஓராயிரம் துளி உதிரக் கண்ணீரை
காதல் தன்னுள்ளே
புதைத்து வைத்திருந்தது
நான்
தணித்து விடப்பட்ட போது
எனது விழிகளுக்குள்
திணித்து மறைந்தது...

இன்னும் அந்நியன் நிலையோ..?



காற்றடித்த திசையில்
வந்திங்கு கால் பதித்த விஜயன்
நிரந்தரமாகி விட்டான்!
கடலில்
கரைந்தவர் போக
மீண்ட நாங்கள்
வனமிங்கழித்து
வளம் சேர்ந்த பின்னும்
அடைப்புக்குறிக்குள்
இன்னும் அந்நியன் நிலையோ..?

என் காதலைப்பற்றி...



நிழலினதும் இரவினதும் அழுக்குகளை
துடைத்து விட்டுப் போகும்
உன் பார்வையில் பட்டுவிட துடிக்கிறது
என் இளம் வயசு!
புழுதி மண் குழியில்
தன்னை துவட்டிக்கொண்ட
குருவியின் விளையாட்டுப் போலல்ல
என் காதல்!
மீசையின் முடியை
நக்கிப் பார்க்கும்
நாக்கின் நுனியால் கொப்பளிக்கப்படும்
வெறும் வார்த்தையும் அல்ல
என் காதல்!
உன் இதயம் பூத்து
என் இதயம் சிலிர்க்கும்
காலம் வரும்
அப்போது சொல்லுவேன்
என் காதலைப்பற்றி...
விடியலை விபச்சாரம் செய்த
பனிக்கூட்டங்களின்
ரகசியத்தை
சேவலின் கூவல்
மொழி பெயர்ப்பதை போல...

அமைதி தொலைந்தது...


தேடுங்கள் கிடைக்குமென்றார்
தட்டுங்கள் திறக்குமென்றார்
தட்டிய கதவுகள்
தானாய் மூடிக் கொண்டன
ஏன் அவை மூடின?
ஓ...
அவை இதயக் கதவுகளா..?
இல்லை...
அவை இரும்புக் கதவுகள்
அதனால் தான் மூடிக் கொண்டன
அதனால் தான் - நான்
தேடியது கிடைக்கவில்லை
அயலிலே அனல் வீசுகின்றன
உறவுகள் ஊமையாகின்றன
உதிரத்தில் தேட - அவை
உக்கிரமாய் துளைக்கின்றன
அனைத்திலும் தேடி
அமைதி தொலைந்தது...

நெஞ்சிலேன் போராட்டம்...


                      

 


தேடியே ஓடுகிறேன்
கல் நிறைந்த பாதையிலும்
முள் நிறைந்த வீதியிலும்
பசுந்தரைகள் காணவில்லை
பரந்திருக்கிறது பாலைவனம்
தென்றலைத் தெரியவில்லை
சூழல்கிறது சூறாவளி
நாற்றிசையிலும்
நயவஞ்சகர் கூட்டம்
ஏனிந்த வாழ்க்கை
நெஞ்சிலேன் போராட்டம்...
PAKEE Creation