Wednesday, May 27, 2020

மாறும் மாறும் எல்லாம் மாறும்...



மாறும் மாறும் எல்லாம் மாறும்
பணமேது தேடும்
நிலையது மாறும்
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
உண்ணும் போது
சிரிக்க முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடிக்
களிக்க முடியும்
பட்டியல் நீளும்
முடியும் முடியும்
எல்லாம் முடியும்
இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்...

சுமைகள் சுதந்திரத்திற்கான சூத்திரங்கள்...


ஏதோ ஒன்றை
சுமந்து கொண்டுதான்
இங்கே நம்முடன்
பயணங்கள் பயணிக்கின்றன
சுமைகள் சுதந்திரத்திற்கான
சூத்திரங்கள்
பார்த்த மாத்திரத்தில் கனிகளை
பறிக்க இயலாது
சுமக்க கற்றுக்கொள்
சுமக்க தெரிந்தவர்கள்
சுமக்கிறார்கள்
சாதனைகளை...

கள்ளினும் காமம் இனிது...


உள்ளே போனால்
தானே மது வெறிக்கும்
உண்டால்தானே
மது மயக்கும்
ஆனால்- நினைக்கவே
வெறிக்கிறதே இது
என்ன மயக்கம்?
"இதன் பெயர்தான் இன்ப மயக்கம்
நினைத்ததும் இனிக்கும்
காம மயக்கம்,
உண்ணும் கள்ளும்
ஈடாகாத
இன்ப மயக்கம்"
"உள்ளினும் தீராய்
பெருமகிழ செய்தலால்
கள்ளினும் காமம் இனிது"...

காதலின் சக்தி


காதலின் சக்தி எதிலே தெரியுமா?
எண்ணிக் கொண்டே இருக்கும்போது
எண்ணியவரே எதிரே வந்து நிற்கும் வியப்பிலே.
மனது அனுப்பி தகவல் கொடுக்கிறதோ?
"நினைவுகளே தந்திகள்
நினைவுகளே தபால்கள்
நினைவுகளே புறாக்கள்
காற்றில் பறந்து சென்று
காதல் தூது சென்று
கைபிடித்து இழுத்து வருகின்றன".
களைத்து வந்தவரை எப்படி கவனிப்பாய்?
"நெஞ்சுக் கூட்டுக்குள்
இழுத்தணைத்து பூட்டிக் கொள்வேன்
கொஞ்சும் இதழினாள்
கொவ்வைப் பழம் கொடுப்பேன்"
கைகள் தாளமிட
கால்கள் கலந்தாட
தோள்கள் சுதிசேர
பாலும் பழமாகி
தேனும் சுவையாகி
தேகம் சதிர் ஆடும்...

என்றுமே உனக்கு நான்...


என் கவிதை எனும்
அதி அற்புதமான படைப்புக்கு
உன் உருவமே சாட்சி
என் கவிதையில் இந்த உலகம்
மிக இனிமையாக இருந்தாலும்
அதில் அழகாக தோன்றுவது உன் முகம் தான்
ஒத்த பின்னலும்
பூப்போட்ட பாவடையும் சட்டையுமாய்
வட்ட முகத்தில் சிவந்த பொட்டுடன்
சிரிப்போடு போட்ட விதைதான்
இந்தக் கவிதைகள்
இந்த ஊமைக்குயிலை
கவிக்குயிலாக்கிய என் உயிரே
என்றுமே உனக்கு நான்
காதல் காணிக்கை தான்...

நான் நானாக இல்லை...



நெஞ்சில் ஆசைவந்தபோது
கையில் பொருள் இல்லை;
கையில் பொருள் வந்தபோது
நெஞ்சில் ஆசை இல்லை;
வயிற்றில் பசிவந்தபோது
கையில் உணவு இல்லை;
கையில் உணவு வந்தபோது
வயிற்றில் பசி இல்லை;
எழுத நினைத்தபோது
நெஞ்சில் சிந்தனை இல்லை;
நெஞ்சில் சிந்தனை வந்தபோது
எழுத நேரம் இல்லை;
மனதில் காதல் வந்தபோது
காதலிக்கும் ஒருத்தி இல்லை;
காதலிக்க ஒருத்தி வந்தபோது
மனதில் காதல் இல்லை;
நாடு, அதை நாடும்போது
இன்று எனக்கு நாடு இல்லை;
நாடு எனை நாடும்போது
அன்று நான் இவ்வுலகில் இல்லை;
இல்லை இல்லை என்பதனால்
நான் நானாக இல்லை...

துணிவு இருக்க வேண்டும்...



மற்றவர்களுடைய தவறுகளைச்
சொல்வது ஆச்சரியமான விடயம்
ஒன்றும் இல்லை
உன்னுடைய தவறுகளையும் திரும்பிப் பார்க்கின்ற துணிவு
உனக்கும் இருக்க வேண்டும்...

கல்யாணச் சந்தை...



உலகப் படத்தை விரி
தரையால், வானத்தால்
கடலால்
எப்பிடியாயினும்
வெளிநாடு செல்லும்
சுலபமான வழியைக் கண்டுபிடி

விலை பேசு
சோதனை
அதிகமில்லாத கடவுச்சீட்டு
எந்த நாடாயிருப்பினும் விலை பேசு

வெளிநாட்டில் மண்ணில் கால் பதித்தால் போதும்
கல்யாணச் சந்தையில்
அதிக விலை போய் விடுவோம்...

பூமியைச் சுவாசிக்க...


தனது உடமைகளை
நெஞ்சோடு சேர்த்து
பாதுகாக்கும் குழந்தைபோல்
உன் கைகளுக்குள்
இறுகியிருக்கும் என் வாழ்க்கை

சற்றே கைகளைத் தளர விடு
நான் இந்த பூமியைச் சுவாசிக்க...
PAKEE Creation