Sunday, December 6, 2020

தேடல்களும் தேர்வுகளும் தானே வாழ்க்கை...




வெகுநாட்களாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்து போன ஏதோ ஒன்றை

தேடல்கள்
அதிகரித்ததாலோ ஏனோ
மறந்தே போனது
எதை தொலைத்தேன்?
இதோ !
எனது தேடல்களும்
தொடர்ந்த வண்ணமே

மேகத்துள் மறைந்த நீர்த்துளி
கால் நழுவி பூமியில் விழுந்து
தொலைந்து போனதே!
அதையா தேடுகிறேன்

அல்லது,
பெளர்ணமி அன்று நிலவு
மறைந்து போனதே
அதையா தேடுகிறேன்?

கண்விழித்த போது
கனவு கலைந்து போனதே
அதைத்தான் தேடுகிறேனோ?

கைக்கொடுக்க வந்த உறவுகள்
கைநழுவிப்போனதே
அதைத்தானோ?

நிலாச் சோறுண்டு
நித்தம் மகிழ்ந்த அந்த
நிஷ்களங்கமான
குழந்தைப் பருவத்தையோ?

தாயின் மடியில்
தலை சாய்த்து அமைதி கண்ட
பள்ளிப் பருவத்தையோ?

தெரியவில்லை!

தேடல்கள்
அதிகரித்ததாலோ ஏனோ
மறந்தே போனது
எதைத் தேடுகிறேன்

இருப்பினும் எனது
தேடல்கள் தொடர்கின்றன

தேடல்களும்
தேர்வுகளும் தானே வாழ்க்கை...

ரணங்கள்...




பல்வேறு வகையான ரணங்கள் தான்
ஆபரணங்களாக வந்து என் வாழ்வில்
பல தடவை மாலை அணிவித்தது
என் விதியை எண்ணி
இந்த உலகத்தையே
மறந்துவிட நினைத்தேன்

தேன்பூச்சி கொட்டிவிட்ட
தோரணையில்
என் இனிய நினைவுகள்
ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன

முன்னேற்றப் பாதையை
நோக்கிப் பல தடவை
நான் எடுத்துக்கொண்ட
அத்தனை உபாயங்களும்
அர்த்தமற்ற உத்திகளாயின...

எதிரி களைக்கும் வரை...



எழுந்து வா ஆழ வேரோடு கிளைகள் பரப்பு
தளிர்கள் தளைத்து தலை நிமிர்த்து
தலை மீது இன்னும் ஒரு இடி இறங்கலாம்
கிளைகள் முறியலாம் இலைகள் உதிரலாம்
சளைத்து விடாதே
உனக்கென்றோரு உரமான மண்
உன்னிடம் இருக்கும் வரை
மீண்டும் துளிர் விடு ஆழவேரோடு
மீண்டும் மீண்டும்
எதிரி களைக்கும் வரை...

தன்னம்பிக்கை...



பார்த்த அளவில் பதறாதே
பயந்து பயந்து சாகாதே
நேர்த்தியாக நெஞ்சை நிமிர்த்து
நினைத்த செயலில் மனதைச் செலுத்து
முடியாது என்று தயங்காதே
முனைய முன்னே மயங்காதே
உன்னை உனக்கே தெரியவில்லை
உன் திறமை உனக்கே புரியவில்லை
காற்றினை அணைத்துப்பார் - அதன்
வேகத்தைக் கணித்துப் பார்
ஆற்றினைச் சற்றுப்பார் - அதன்
தொழில்களை உற்றுப்பார்
நெருப்பினை அணுகிப்பார் - அதன்
சக்தியின் தணலைப்பார்
இவை இயற்கை சக்திகள்
நீயும் இயற்கையின் ஒரு படைப்பு
உனக்குள்ளும் சக்தி ஒன்று
உறங்கிக் கிடக்கிறது
எப்பொழுது நீ அதனை நீ உணர்கிறாயோ
அப்பொழுது அது விழித்துகொள்ளும்
அந்த விழிப்பில்
உன்னை உனக்கே தெரியும்
உன் திறமை உனக்கே புரியும்
அப்பொழுது நீ உன்னை நம்புவாய்
நம்பிக்கை யாவற்றிலும் மேலானது
தன்னம்பிக்கையே
தன்னம்பிக்கை உள்ளவர்க்குத்
தரணியெல்லாம் அடிபணியும்
இல்லை அது என்று சொன்னால்
கல்வி என்ன செல்வம் என்ன
தலையெடுக்க முடியாது...

வாழ்க்கையை இறுகப் பற்றிக்கொள்...



இது என்ன வாழ்க்கை
வாழ்க்கைப் பிடிப்புக்கள்
வலுவிழந்தனவா
காயங்கள்தான் ஆறினவா
கண்ணீர்தான் முடிந்ததுவா
இனி அழுதால்
இரத்தம்தான் வருமா
இல்லை
வாழ்க்கை உன்னை
வாழ வழிசெய்கின்றது
வாழ்ந்து பார்
விடியும் பொழுதில்
வருகின்றது சூரியன்
வரும் இன்பமும் துன்பமும்
வருகின்ற வரையில் வரும்
வருவதும் போவதும் நியதி
நீ
வாழ்க்கையை
இறுகப் பற்றிக்கொள்...

விடைகளோடு பிறந்திட வேண்டும்...



பசியினால் பட்டினி கிடந்து
மாண்டுபோன மனிதங்கள்
பிணி பிடித்து
பிரிந்து சென்ற உயிர்கள்
கோரக்குண்டுகள் பாய்ந்து
மடிந்து மண்ணறையடைந்த ஜீவங்கள்
இயற்கையின் பாய்ச்சலினால்
இறந்து போன இதயங்கள்
எல்லாவற்றினதும்
நினைவுகள் மீட்கப்பட்டன
முடிந்துபோன பொழுதுகளில்
அத்தனை துயரங்களும் கலைந்து போய்
அகிலத்தின்
அனைத்து மனித தேடல்களுக்கும்
விடைகளோடு பிறந்திட வேண்டும்...

இந்த உலகம் போதாதென்றொரு வெறியில்...



ஆண்களும் பெண்களுமாய்
நடமாடிக்கொண்டு திரிகிறார்கள்
மனிதம் இல்லாத உடம்புகளோடு
கொம்புகள் முளைக்காத
விலங்குகள் மாதிரி
கால்களினால் மட்டும்
வித்தியாசப் பட்டுக்கொண்டு
இந்த உலகம்
போதாதென்றொரு வெறியில்...

எனது கண்ணீரின் அர்த்தத்தை...

 


முட்களில் வாழ்ந்து
முட்களினால் படரப்பட்டு
முட்களினால் பாதுகாக்கப்பட்ட நான்
கள்ளியின் மேல் பூத்திருக்கும்
பூப் போன்றவன்
நான்கு சுவர்கள் சொல்லும்
என் தனிமை பற்றி
தனிமையின் துயரம் பற்றி
வாழ்தலின் வெறுமை பற்றி
எனது குளியலறை சொல்லும்
எனது கண்ணீரின் அர்த்தத்தை...

யாரோ ஒருவர்தான்...




குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர்
யாரோ ஒருவர்தான்
குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர்
யாரோ ஒருவர்தான்
கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர்
யாரோ ஒருவர்தான்
கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்
யாரோ ஒருவர்தான்
எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க்
கிடந்தவரும்
பாதி கருகிப் பாதையில் கிடந்தவரும்
யாரோ ஒருவர்தான்
யாரோ ஒருவர்
தெருவில் சிதிலமாய்க் கிடக்கிறாரென
யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள்
சுதாகரித்துக்கொள்...

உன் முன்னால் வருவதற்கு



உன் முன்னால் வருவதற்கு
நான் துணியாத நாட்களில்
நிழல் போலத்தான் தொடர்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம் உன் கூந்தலில்தான்
என் மனம் கூடுகட்டியிருந்தது
உன் கூந்தல் அசைந்தபோதெல்லாம்
என் மனதும் இசைந்து ஆடியது
நீ எனக்குள் போதை ஊற்றினாய்
உனக்குத் தெரியாமலே...
PAKEE Creation