Wednesday, April 3, 2019

இயற்கையின் சிருஷ்டி...



ஒன்றில் இருந்துதான்
இன்னொன்று ஆரம்பமாகிறது
இன்னொன்றில் இருந்து மற்றொன்று ஆரம்பமாகிறது
வானத்தில் திரிகின்ற மேகங்களைப் பார்
அதற்கும் அப்பால் தெரிகின்ற
நட்சத்திரங்களை பார்
எல்லாமே ஒன்றில் இருந்து
மற்றொன்றாய் உருவெடுத்தவைதான்
இந்தப் பிரபஞ்சத்தில் தானாக எதுவுமே உருவாதில்லை
பிரபஞ்சம் மட்டுமில்லை
மனிதனின் வாழ்வு நிலையும் அப்பிடிதான்
உன்னுடைய உருவாக்கம் முதல்
இறப்பு வரை இப்பிடிதான் இருக்கிறது இயற்கையின்
சிருஷ்டி...

ஆத்மாவைப்பாருங்கள்...


மார்பையும், நீண்டு வளரும் கூந்தலையும் கண்டால்
பெண் என்கிறார்கள்

தாடியையும் மீசையையும் கண்டால்
ஆண் என்கிறார்கள்

ஆனால் இவற்றிற்கு இடையில்
மிதக்கும்
ஆத்மாவைப்பாருங்கள்
அது ஆணுமில்லை
பெண்ணுமில்லை...

அறிந்து கொள் மானிடா...



நெருப்பு எரிக்கும்
ஆனால் அசைவதில்லை

காற்று அசையும்
ஆனால் எரிப்பதில்லை

காற்றும் நெருப்பும் இணையும்வரை
அதற்கு எந்தவொரு ஏற்றமும் இல்லை

அறிதலும், செய்தலும்
இது போலத்தான்
அறிந்து கொள் மானிடா...

உன் அடிவயிற்றுக்கு வணக்கம்...


உனது கண்கள்
காதலில் குளிர்ச்சி பெற்றிருக்கின்றன

உன் கன்னங்களில்
இளமை மின்னுகிறது

உன் இதழ்களில்
கருணை மலர்கிறது

உன் விரல்கள்
காற்றில் மீட்டுவது என்ன ராகம்

புது மழையில் மண் மணம் போல
உன் வியர்வை

உன் மார்புகளின் சுனையில்
என் கனவுகளை கரைப்பேன்

என் மூதாதையர் முகங்கள் உறங்கும்
உன் அடிவயிற்றுக்கு வணக்கம்...

வாழ்வு எங்களுக்காய்...




நாங்கள் அகதிகள் இருப்பு தொலைந்து
புதிய இருப்புக்காய்
அலைந்து கொண்டிருக்கிறோம்

வாழ்க்கையின் வசந்தங்களை
எண்ணியே
எங்கள் வாழ்க்கைப்பட்டம்
அறுந்து போனது

உல்லாசமாய் வாழ
விசாவொன்றும் வீடொன்றும்
காரொன்றும் வேலையொன்றும்
அழகான பெண்ணொன்றும்
அமைந்தால் போதும்
வாழ்வு எங்களுக்காய்
ஆனதாக எண்ணிக் கொள்கிறோம்...

அம்மா...


சும்மா இருந்து
சோம்பல் முறித்து
அம்மா தந்த சோற்றைத் தின்று
வம்பை வருந்தி அழைத்த
காலத்து
வீம்பை நினைக்கிறேன் - அம்மா
தந்த
சோற்றில் இருந்த உழைப்பை நினைக்கிறேன்
பதிலுக்கு
கண்ணீர் தான் வருகிறது...

எந்த மரணங்களுக்கும்...


எந்த மரணங்களுக்கும்
எந்த நியாயத்தையும்
கற்பிக்க முடியாது
எல்லா மரணங்களுக்குமான
மூலங்களை
நான் ஒரு போதும்
அறிய விரும்பியதில்லை
அவை எப்போதும்
என்னைக் குழப்பத்தில்
ஆழ்த்தி விடுகின்றன...

அன்பே...



உன்
மெளனத்தில் புதைந்துள்ள
வண்ணங்களை தரிசிக்க முடிகிறபோது
நெருக்கத்தை உணர்கிறேன்

உன்
வார்த்தைகள் வெளிப்படுத்தும்
வாசனையை நுகர முடியாத போது
தூரத்தை உணர்கிறேன்...

ஆயுள் தண்டனைக் கைதிகளா இந்த ஏழைகள்?...


மனிதன் சந்திரனை முத்தமிடும் யுகமிது
கோள்களுக்கு கால்கள் பூட்டி
பூமிக்கு இழுத்து வந்து
நூதனசாலையில் காட்சிக்கு வைக்கும் காலமிது
ஆடம்பரம் நடனம் புரியும் நவீன நூற்றாண்டிது
ஆனால்
ஏழைகளின் வயிறுகள்
இன்னமும் தீப்பிடித்து எரிகின்றன
ஏழைகளின் தென்றல் புயலாகத்தான் பிறப்பெடுக்கின்றது
இருளின் ஆயுள் தண்டனைக் கைதிகளா இந்த ஏழைகள்?...

நிலவின் பிரதிபலிப்பு...


நீர்நிலையில் தெரியும்
நிலவின் பிரதிபலிப்பு
அழகிய அற்புதமாம்
ஆண்டவன் படைப்பில்
முட்டாள் மனிதா!
குனித்து பார்த்துக்
கூனிவிடாதே
நிமிர்ந்து பார்
உனக்கு மேலே
வானத்தில் முழுதாக
இருக்கிறது முழுமதி...
PAKEE Creation