Thursday, July 3, 2014

ஆண்...

பெண்ணை விட
ஆண்களை பலமா படைச்சதுக்கு காரணமே
பெண்களுக்கு பாதுகாப்ப இருக்கணும் என்றதற்காகத்தான்...

வித்தியாசம்...

படிச்சதெல்லாம் கொண்டு போய்
வாழ்க்கைல Apply பண்ண முடியாது
அனுபவத்தில்தான் அதை கற்று கொள்ள முடியும்
இரண்டுக்குமே நிறைய வித்தியாசம்...

வாழ்க்கை...

ஒரு உயிரை எடுத்து தான் உள்ள வாறோம்
உயிரை விட்ட தான் வெளிய போக முடியும்...

கடவுள்...

சக்தியிழந்த நிலையில்தான் மனிதன் கடவுளை நினைக்கிறான்
சுயபலத்தில் நம்பிக்கையிருக்கும்வரையில்
மனித எண்ணத்தில் மமதை ஒங்கி நிற்கிறது
நிர்ப்பலமாகித் திண்டாடும் சமயத்தில் தான்
அகங்காரம் விலகி கடவுளுக்கு இடம் கொடுக்கிறது மனது
வேண்டியவேளையில் மட்டும் கடவுளை நினைத்தால் போதுமா
என்ற சர்ச்சையில்கூட
மனித மனம் அந்தச் சமயத்தில் இயங்குவதில்லை
ஆபத்தான நிலைமையில் ஆதரவாகப் பிடித்து கொள்ளக்கூடிய இடத்தை மனம் நாடுகிறது
திக்கற்ற நிலைமையில் மனித மனத்துக்கு பிடிப்பை அளிப்பது கடவுளின் நினைப்பு ஒன்றுதான்...

சரித்திரம்...

எது சரித்திரம்?
மக்கள் அறிந்ததே சரித்திரம்
அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாக
கலந்து விட்ட நிணைகளே சரித்திரம்
"நாம் நீர்க்குமிழிகள் அல்ல
வடியாத பெருவெள்ளத்தின் துளிகள் நாம்"
அற்ப வாழ்வுடைய தனிமனிதர் அல்ல
அழிவற்றதோர் பரம்பரையின் உறுப்பினர் நாம்
நேற்று இருந்தோம் , இன்று இருக்கிறோம்
நாளைக்கும் இருப்போம் என்று
தோள்தட்டத் தூண்டுவதே சரித்திரம்...

கனவு...

வாழ்க்கையின் ஒரு பகுதி தானே கனவு
ஆனால் அந்தக் கனவில் தானே மனிதன் மனத்தின்
சுகங்களை அடைய முடியாத இன்பங்களை அடைகிறான்
கைக்கெட்டாதது மனத்துக்கு எட்டுகிறது கனவில்...

விஷம்...

உலக ரீதியே இப்பிடித்தான்
எத்தனை பாலையும் வீணடிக்க
ஒரு துளி விஷம் போதும்
நல்லவர்களின் வாழ்வும் அப்பிடித்தான்...

பணம்...

ஒருவன் பணம் சேர்க்க
எத்தனை பேர்
அடிமையாக வேண்டியிருக்கிறது...

ஆண்கள் கோழைகள்...

உண்மையில் ஆண்கள் கோழைகள் தான்
உலகில் பிரதி தினம் அக்கம் பக்கத்தில்
நூற்றுக்கணக்கில் குழந்தைகள் பிறப்பதை அறிந்தும்
தங்கள் மனைவிக்கு அந்த நிலை வந்தால்
என்ன பயம் பயப்பிடுகிறார்கள்...

ஆண் பெண் உறவில்...

ஒரு பெண் தனக்குச் சொந்தம் என்று ஏற்பட்டதும்
ஆண்கள் கேட்டுக் கொள்ளும் கேள்வி
"என்ன இருந்தாலும் என் மனைவி என்னை விட்டால் இவளுக்கு யாரிருக்கிறார்கள் ?"

அதுவரை வளர்த்த தாய் தந்தையர் , சகோதர சகோதரிகள் இருந்தாலும் அவர்களையெல்லாம் அசட்டை செய்கிறது
ஆண் மனம் தனக்குத்தான் பொறுப்பிருப்பதாகத் துள்ளுகிறது மணமான மறுகணம் இந்த விசித்திரம் ஏற்படுகிறது
காரணம் சம்பிரதாயமா? அல்லது இயற்கை விளைவிக்கும் விந்தையா? பதிலில்லாத புதிர் , அவிழ்க்க முடியாத விந்தை ஆனால் இது ஏற்படுகிறது ஆண் பெண் உறவில்...

சந்தேகம் அலட்சியம்...

மனித வாழ்வில்
நடக்குமா? நடக்காதா? என்று
நினைப்பவனுக்கு எதுவும் நடப்பதில்லை
தெய்வம் உண்டா? இல்லையா? என்று
நினைப்பவனுக்குத் தெய்வம் கிடையாது
வீரம் தனக்கு உண்டா? இல்லையா? என்று
சந்தேகிப்பவனுக்கு வீரம் கிடையாது
சந்தேகம் அலட்சியம் இந்த இரண்டும்
சிந்தனையின் பலவீனங்கள்
நம்பிக்கை , லட்சியம் இரண்டும்
ஆத்மாவின் சக்திகள்
ஒரு மனிதனுக்கு வாழ்வில்
இரண்டும் எப்பவும் அவசியம்...

காதலின் அர்த்தம்...

ஆண்களுக்கு
முரட்டுத்தனம் மட்டும் இல்லாவிட்டால்
எந்தப் பெண்ணுக்கும்
காதலென்பதற்கு அர்த்தம் புரியாது...

சிருஷ்டி...

மனிதப் பிறவியில்
சமுதாயக் கட்டுப்பாடுகள் , நாகரிக வலைகள்
எத்தனை கோட்பாடுகளை ஏற்படுத்தினாலும்
சிருஷ்டியின் அடிப்படை இச்சைகளை
யாரும் வெற்றி கொள்ள முடிவதில்லை...

விதி...

விதியென்பது ஆண்டவனின் விசித்திர தண்டம் (தண்டனை கொடுக்க)
மனித அறிவுக்குச் சிறிதும் புலப்படாத ஒரு மர்மம்
அஞ்ஞானி அதை அறிவீனத்தால் அசட்டை செய்கிறான்
விஞ்ஞானி அதை விவேகத்துக்கு ஒவ்வாதது என்று புறக்கணிக்கிறான்
மெய்ஞ்ஞானி அதை ஆண்டவன் கட்டளை , கர்மத்தின் கரம் என்று உணர்ந்து அதன் விளைவுகளுக்குச் சிரம் தாழ்த்துகிறான்
ஆனால் அந்த மெய்ஞ்ஞானிகூட விதி எதை விளைவிக்கிறது என்பதை அறியாமல் திகைக்கிறான்

வலைஞன் எப்படி ஒரு நூலிழையை எடுத்துப் பின்னத் துவங்கி பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறானோ
அப்பிடியே விதியும் வாழ்வின் ஒரு நூலிழையை எங்கோ துவக்கி
எப்படியோ பின்னிப் பெரும் வலையைச் உருவாக்கி விடுகிறது
அதில் சிக்க வேண்டியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்
அதை நாடி வருபவர்கள் தானே வருகிறார்கள்
அப்படி வருவதை "சந்தர்ப்பம்" , 'தற்செயல்' என்ற
சொற்களால் குறிப்பிடுகிறார்கள்
உலக பந்தத்தில் உழலும் மனிதன் வைத்த பெயர் அவை
சாஸ்திரம் வைத்த பெயர் விதி...

ஆண்டவன்...

மனித சக்திகள்
பயனற்றுப் போகும்போதுதான்
மனிதன் ஆண்டவனைச் சந்திக்கிறான்...

மண்ணாசை...

சொர்க்கத்தின் சிறப்புகளை
புராணங்கள் எத்தனை தான் வர்ணித்தாலும்
பேரின்பத்தை அடைவதன் உயர்வை
வேதாந்தங்கள் எத்தனை தான் போதித்தாலும்
பூலோகத்தில் இருப்பதில் மனிதன்
எத்தனை திருப்தி அடைகிறான்
உலகத்தில் மதங்கள் பல இருந்தாலும்
தத்துவங்கள் பல இருந்தாலும் இந்த உலகத்தைவிட்டு
மேல் உலகம் சென்றால் எத்தனை அமைதியும் சந்தோசம் உண்டு என்பதை மதங்களும் தத்துவங்களும் லியுறுத்தினாலும்
உயிருடன் பூவுலகத்தில் கூடியவரை வாழவேண்டும்
என்ற ஆசை மனிதனை விட்டு அகலுவதில்லை
"
மண்ணாசை சில நேரங்களில் சிறந்ததுதான்"...

எண்ணங்கள்...

இதமான இனிமையான எண்ணங்கள்
வேகமாக வளருவதில்லை
ஆனால்
கொடுமையான , விபரீதமான எண்ணங்களுக்கு
மட்டும் ஆயிரம் கால்கள் ஒரே கணத்தில்
முளைத்து விடுகின்றன...

தகுதி...

துன்பத்தை தங்கிக் கொள்பவனுக்குத் தான்
இன்பத்தை வரவேற்கிற தகுதி உண்டு
அதாவது
எவன் புளிப்பைச் சாப்பிட மாட்டேனென்று சொல்கிறானோ
அவனுக்கு இனிப்பைச் சாப்பிட அருகதை கிடையாது...

காலம்...

காலம் ஒரு காட்டுக் குதிரை
அதன் பாய்ச்சலைப் பிடித்து நிறுத்த
யாருக்கும் ஆற்றல் கிடையாது...

சுமை...

வீடு என்கிற சுமையை விட்டு விட்டு
ஓடப் போகிறேன் என்கிறாய்
ஆனால் உன்னுடைய உடல் என்கிற
சுமை உன்னோடுதான் வரும்
பெற்றோரையும் சகோதரர்களையும்
உற்றார்களையும் உறவினர்களையும்
விட்டுவிட்டு ஓடப்போகிறேன் என்கிறாய்
ஆனால் உன்னுடைய அகங்காரம் , உன்னுடைய ஆசை , உன்னுடைய கோபதாபம் யாவும்
உன்னுடன் தானே வரும்...

காதல்...

காதல் சூழ்நிலையில் மனம் சிக்கும் போது
புத்திக்கு மறதி பெரிதும் ஏற்படுகிறது
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் எத்தனை பிணைப்பு
ரோஜாவையும் முள்ளையும் போல்...

கோவம்...

கோவம் யார் கண்ணையும் மறைக்கவல்ல
ஒரு பெரும் திரை
அந்தத் திரையைச் சரேல் சரேலென
மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப்
பழகிக் கொண்டுவிட்டால் உலகத்தில்
பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும்...

அன்பு...

அன்பு மெள்ள மெள்ள முளைப்பதில்லை
திடீரென்று தான் ஏற்படுகிறது
அதுவும் ஆசையைப் போல்தான்

அழகான மலரைப் பார்க்கிறோம்
திடீரென்று ஆசை பிறக்கிறது
ஓர் அழகான பெண்ணைப் பார்க்கிறோம்
திடீரென்று அன்பும் பிறக்கிறது
அன்பும் ஆசையும் முளைப்பது சில விநாடிகளில்தான்
அவற்றுக்கும் காலமும் யோசனையும் தேவையில்லை...

மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

நாம் வாழும் மண்
எந்த வித்தியாசத்தையும் காட்டுவது கிடையாது
எந்த ஜீவராசிகளையும் சமமாகப் பாவிக்கிறது
மண் தாய் அவள் தான் குழந்தைகளில்
யாரையும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை
எல்லோரையும் அழைத்துக்கொள்கிறாள்
என்றாவது ஒரு நாள்.

மண்ணிடமிருந்து வருகிறோம்
மண்ணால் வளர்கிறோம்
மண்ணுக்கே போகிறோம்
மண்ணுக்குக்கீழ் எல்லாம் சமம்...

காதல்...

உறக்கத்திற்குக் காதல் பெரும் விரோதி
உறங்காத சமயத்திலும் கனவை அளிக்கும் சக்தி
காதல் ஒன்றுக்குத்தான் உண்டு...

உலக இயல்பு...

பெண் காத்திருப்பதும்
ஆண் இஷ்டப்பட்ட வேளைக்குத்
திரும்புவதும் உலக இயல்பு...

மனிதன்...

மனிதன் விரும்புவதைத்
தெய்வத்திற்கு படைக்கிறான்
தனக்கு வேண்டியதைத்
தெய்வத்திற்கும் வேண்டுமென்று நினைக்கிறான்...

இல்லாது வந்தோம் இல்லமால் போகிறோம்...

இல்லாம் , இல்லம் , இலம்
இந்த மூன்று சொற்களுக்கும் ஒரே பொருள்
"இல்லாது வந்தோம் இல்லமால் போகிறோம்
இடையிலே சிலர் நம்மை இல்லாதவர்கள்" ஆக்குகிறார்கள்...

மனைவி...

மனைவிக்குக் கணவன்
கேள்விக் குறியாக இருந்தால் தான்
மனைவி எப்போதும் அவனைப்பற்றி
சிந்தித்துக் கொண்டிருப்பாள்...

பயம் வேறு பக்தி வேறு...

பயம் வேறு பக்தி வேறு
பயம் மனத்தின் உளைச்சலிருந்து முளைக்கிறது
பக்தி அன்பின் ஆழத்திலிருந்து ஏற்படுகிறது
இரண்டும் இணைவது கஷ்டமென்றாலும்
அப்படி ஏற்படவே செய்கிறது இவ்வுலகத்தில்

உலகத்தில் பக்தியைக் காட்டுபவர்களில்
நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது போருக்குப்
பயத்திலிருந்தே பக்தி உண்டாகிறது
வியாதியின் பயத்திலிருந்து விடுபடப் பலர்
கோயிலுக்குப் போய் அர்ச்சனை முதலியன செய்து
தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள்
இன்னும் சிலர் பணக் கஷ்டத்தினால் ஏற்படும்
பயத்தை நீக்கிக் கொள்ளப் பலவித பிரார்த்தனைகளைக்
செய்து பக்தியைக் காட்டுகிறார்கள்

தங்களுக்கு ஏற்படும் பலவித கஷ்டகளுக்குத்
தெய்வ அபசாரம் காரணமாக இருக்குமோ
என்ற பயத்தால் அதைப் பக்தி மூலம்
நிவர்த்தி கொள்ள முயலுகிறார்கள் இதனால் தான்
தெய்வங்களிடத்தும் அவற்றின் அருளுக்கு
வழிகாட்டும் பெரியோர்களிடத்தும்
பயபக்தி வேண்டும் என்று
பயத்தையும் பக்தியையும் இணைத்தே
உலகம் கூறுகிறது...

மதம்...

மதம் உலக நன்மைக்காக ஏற்பட்டது
அழிவிக்காக அல்ல
ஆனால் மதத்தின் பெயராலேயே
அழிவுச் செயல்களில் மனிதன் ஈடுபடுகிறான்
இதற்கு ஆண்டவன் பொறுப்பாளியல்ல
தனி மனிதனின் ஆசையும் வெறியும் தான் காரணம்...

அதிர்ஷ்டம்...

மனித முன்னேற்றத்துக்குத் தேவை அதிர்ஷ்டந்தான்
ஆனால்
அது ஏன் வருகிறது எப்படி மாறுகிறது
என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டதாயிருக்கின்றது...

சந்தர்ப்பங்கள்...

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள்
ஏன் வருகின்றன் எப்படி வருகின்றன
யாருடன் நம்மைச் சேர்க்கின்றன
யாரிடமிருந்து பிரிகின்றன
என்பதைச் சொல்ல முடிவதில்லை...

குறிக்கோள்...

சாவைத் தேடுகிறவன் சாவதில்லை
அதற்கு அஞ்சுகிறவன்தான் சாகிறான்
வாழ்க்கையில் குறிக்கோள் உள்ளவன் உயிர்
நீண்ட நாள் உடலில் இருக்கிறது...

விவேகி...

வாழ்க்கையில்
பணத்துக்கும் சரி பதவிக்கும் சரி உணர்ச்சிக்கும் சரி
எதற்குமே ஏற்றத்தாழ்வு உண்டு
அந்த ஏற்றத் தாழ்வுகளால் அடியோடு
பாதிக்கப்படாதவன் யோகியாகிறான்
அடியோடு பாதிக்கபடுபவன் ஒன்று போகியாகிறான்
அல்லது ரோகியாகிறான் சற்றுப் பாதிக்கப்பட்டாலும்
சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து
அவற்றினின்று சட்டென்று
விலகிக் கொள்கிறவன் விவேகியாகிறான்...
PAKEE Creation