Sunday, January 22, 2017

உதிரத்தில் இருப்பது சிவப்பு நிறம் மட்டுமல்ல...


இருளைச் சுவாசிக்கும் இதயங்களே
இங்கே விளக்குகள் மட்டுமா எரிகின்றன?
நாமும் தான்!
உடம்புகள் சாம்பலாகலாம்.
உணர்வுகளுமா?
கனவுகளை கைது செய்து
வாழ்க்கைச் சிறையில் அடைத்து
நினைவுகளைப் பிடித்து விடியல்களில் பூட்டினோம்
வாழ்க்கையே சிறையாகிட
நொண்டியான நினைவுகளால்
நாம் முடமாகினோம்
வேதனை ஓடைகளாக
மண்ணுக்கு சங்கமிக்க
கல்லறைக் கவிதைகளாக
நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்
எம்
இதயக்கதவுகள்
இழுத்து மூடப்பட
புதிய எண்ணங்களை
புதைகுழிக்குள் போட
நாமென்ன
அஃறிணைகளா?
ரகசியமாய் சுவாசிப்பதற்கும்
எம் இதயத்தின் சத்தம் எமக்கும்
கேட்காமலிருப்பதற்கும்
நாமென்ன மனிதர்களில்லையா?
நினைவுப் பூக்கள்
மனதில் மலர்வதற்கும்
கனவுத் தென்றல்
எம் வாழ்க்கைச் சோலையில்
நுழைவதற்கும்
அனுமதியா தேவை?
தோழர்களே
உதிரத்தில் இருப்பது
சிவப்பு நிறம் மட்டுமல்ல
எம் சந்ததியின்
சரித்திரமுந்தான்...

நீ மனிதன் என்பதை மறந்து விடாதே...

இதயத்தை புனிதமாக்கு
உனக்குள் ஒரு உதயம் உருவாகும்
நினைவுகளைப் புனிதமாக்கு
உனக்குள் ஒரு சுகம் பிரசவமாகும்
நீ செல்லும் பாதை நேரானதாஎன்பதை ஆராய்ந்து பார்
காலத்தை வெல்லும் மனிதனாக
வாழ்ந்தால் பார்போற்ற நிலைப்பாய்
உன் சொல்லில் கல்லும் கரையும்
நீ மனிதன் என்பதை மறந்து விடாதே...

அழியாத பாடங்கள்...

நான் காற்றோடு பறந்த
ஓர் வெள்ளைக் காகிதம்

தாலாட்டின் சுகம் காண
மெலெழுந்தேன்! அலைந்தேன்!

இதோ நான்
மீண்டும் தரையில்

எடுத்து வாசியுங்கள்
என்னில் வாசகங்கள்

அவை காலத்தாயின்
அழியாத பாடங்கள்...

உண்மை இதுதான்...

நாம் வாழுற உலகம்
நல்லது தான் ஆனால்
நாறிப் போன ஆசையினாலே
நாறுது உலகம்

உருண்ட உலகம் ஒழுங்காக சுத்துது
அதிலை உடமை இருக்கிறவனுக்கும்
இல்லாதவனுக்கும்
நடக்குது இழுபறி

கணக்கை மீறித் தின்னுறான் ஒருவன்
காலி வயித்தை காயப்போடுகிறான் இன்னொருவன்

மாடி வீடு கட்டி ஒரு கூட்டம்
கோடி சுகம் அனுபவிக்க
குடிசை வீடும் இல்லாம
வீதியிலே கிடந்து வாழுற கூட்டம் பலது

உலகம் எல்லொருக்கும் பொது
உண்மை இதுதான்
இதை உணர்ந்து நாம
உருவாக்கிற வரைக்கும்
இந்த நிலைமை தான்...

வாழ்விற்கான போராட்டம்...

மரணங்கள் மதிப்புள்ளவை
தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை
மரணங்கள் என்றும் மனிதனின் தேவையை அழித்து விடுவதில்லை
மரணம் மனிதனின் கருத்தை உருக்குலைத்து விடுவதில்லை
கருத்துக்கள் என்றும் ஆய்வுக்குரியவை
கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட வேண்டியவை
செயற்பாடுகள் விமர்சிக்கப்பட வேண்டியவை
மனிதன் ஒருவன் வீணே மாய்ந்தான் எனின்
மனித வரலாற்றில் அது நிராகரிக்கப்படும்
மனிதனின் சுதந்திர வாழ்விற்கு இடையூறுகள் தொடரும்வரை
வாழ்விற்கான போராட்டம் தொடரவே செய்யும்...

இதயத்தில் துயரம் இல்லை...

துணிவான இதயத்தில் துயரம் இல்லை
சலியாத உழைப்பில் அலுப்பு இல்லை
கவலை இன்றி உலகத்திலே மனிதன் இல்லை
நீயே தான் உன் சோகங்களை கேட்டுக்கொள்
வாழ்க்கை என்னும் கண்ணீரை உன் கையால் துடை
பல விசயங்கள் புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை...

இறைவனைத் தேடு...

நிலையற்ற இகவாழ்வை நிலையென்று எண்ணி
நிரையாகச் செல்வங்களைச் சேர்க்கின்ற மனிதா
விலையான வாழ்வு விழுந்திடலாம் நாளை
விடமாக மரணம் விரைந்திட்ட வேளை
குலையாத புசிப்பும் குடிப்புமல்ல வாழ்வு
குவலயத்தை படைத்திட்ட பரமனிடம் கேளு

பிறந்தது போன்றே இறந்திடும் தேகம்
பெற்றிட்ட செல்வத்தை பற்றவது இல்லை
உண்ணவும் உடுக்கவும் உன்னிடம் இருந்தால்
உள்ளத்திலே திருப்தியெனும் பொன்னையே நாடு
மண்ணிலே தேகம் மறைந்திட முன்னே
மாயையை நீக்கும் இறைவனைத் தேடு...

இளைஞர்களே...

நீங்கள் நட்சத்திரங்களில் ஊஞ்சல் கட்டி 
அங்கு நடைபோடும் முகில்களை உதைப்பவர்கள்
பட்டாசு இடியின் பக்கத்தில் படுத்துறங்குபவர்கள்
விட்டால் போதும் விண்ணில் ஏறிக் குதிப்பீர்கள்

துள்ளி விளையாடுவது மட்டும் துணிவல்ல
சமுதாயச் சந்தையில் சத்தமிடும் சனங்களுக்கு
விலை பேசித் தீர்த்து விடும்
விடயங்கள் பல உங்களிடம் தான்

மெல்லிய மனசும்
வலிய கரங்களும்
திடமான அறிவும்
திகைக்காத வழியும் தேடுங்கள்
இளைஞர் என்னும் போது
இனிமை பொங்க வேண்டும்
சமுதாயம் உங்களின்
புகழ் பாட வேண்டும்...

எனது புன்னகை...

யார் யாரோ வந்து போகிறார்கள்
எனது மாயத்திரைக்கு
எப்போதுமே கண்டிராத
அவர்களது முகங்கள்
வீசிவிட்டுச் செல்லும் புன்னைகையினை
வாங்கிகொண்டபின்
எனது புன்னகையைப் பதிலாக
அளித்திருக்கிறேன்
வெறும் சம்பிரதாயமாக
பரிமாற்றப்படும் புன்னகை
வெறுமையாய்
உதிர்ந்து விடுகிறது மண்ணில்...

எனக்குள் என்ன இருக்கிறது...


எனக்குள் என்ன இருக்கிறது
கனக்கும் ஆசைகள் சுமந்த இதயமும்
கண்டதையும் நினைக்கும் மனமும் தவிர
வேறு என்ன இருக்கிறது எனக்குள்?

கூர்ப்பு விதிப்படி நனொரு விலங்கு
முன்னர் குறித்த முறைப்படி நானெனில் தெய்வம்
மனிதனாய் இருப்பதே எனது விருப்பம்

உள்ளிருந்து வருகிறதாம் ஞானம்
யாரோ சொல்லி வைத்தார்
வெளியிலிருந்து வந்து உள்ளைத் தாக்கி
மீண்டும் புதிதாய் வெளிச்செல்வதே
உண்மை ஞானம் கண்டு தெளிந்தது என் மனம்

உள்ளும் வெளியும் கலந்தியங்கிறது உலகம்
உள்ளிருந்து வெளியும் வெளியிருந்து உள்ளும்
பிரிகையிலே முடிகிறது பயணம்...
PAKEE Creation