Friday, May 29, 2020

சிறகுகளை தரித்துவை சூரியன் வரை உயர பறப்போம்...




எனது கிரணங்களுக்கு
உன் இதயத்தில்
பாதைகளை உருவாக்கு
நடந்து திரிவதற்கல்ல
நிலைத்து நிற்பதற்கு

என்
இமைச்சிறகுகள் படபடக்க
உனக்குள் ஒரு வானத்தை எழுப்பு

சிரித்து மயக்கும்
உன் கன்னக்குழியில்
நான் நடந்து போக
ஒரு பாலம் போடு

உன் மெளன வளையங்களுக்குள்
சேகரிக்கும் பரிமாணங்களை
அரியாசனத்தில் அமரச்செய்

உன் உதடுகளில்
பூசி மெழுகும் புன்னகையை
நிர்வணமாய் வெளித்தள்ளு

உன் திருமுகத் திருவிழாவில்
பல்லவியை ஒரம் கட்டி
புது அகராதி எழுது

பவனி வரும் பனிக்காற்றை
உன் சுவாசத்தில்
பந்தி போட்டு பத்திரப்படுத்தி வை

உன் விழிகளைச் சுற்றி
இமைகளால் பரண் கட்டாதே
என் பார்வை பரிதவிக்கும்

என் கனவுகளுக்கு
நீ புதிய அறிமுகம்
உன் கருவறைச் சுவரில்
நான் கவிதை எழுத வேண்டும்

பிரியங்களை பலப்படுத்து
உன் நெஞ்சினில் சிறகுகளை தரித்துவை
உச்சிச் சூரியன் வரை உயர பறப்போம்...

காதல் செய்யும் விசிந்திரம்...



வலை என்று தெரிந்துவிட்டால்
எந்த விலங்கும் தானாகச் சென்று
மாட்டிக்கொள்ளாது
வலை என்று தெரிந்த பின்னர்தான்
மனம் அதில் விழுவதற்கு
விலையெதற்கும் தயாராகிறது
காதல் மந்திரம்
செய்யும் விசிந்திரம் அது...

ஆனால்... மனிதர்கள்..?



கடலை முத்தமிடும் தொடுவானம் என்று
இளமையில் கற்பனை செய்யப்பட்ட வானம்.
எப்போதும்போல்
தொடாத கடலை தொட்டுவிட்டதுபோல் பாவனை
காட்டிக்கொண்டு எட்டாத தொலைவில்
சரிந்து கிடக்கிறது.

கரையைத்தொடும் அலைகளைக் காணோம்.
இரக்கமற்ற மனிதர்கள் இதயத்தைத்
திறந்து காட்டினாற்போல்
கற்களும் பாசியுமாய்க் கோலம்காட்டும்
கடலின் முற்றம்.

சற்றுத் தொலைவில் கரைக்கும்
தொடுவானத்துக்கும் இடையே சத்தமின்றிப்
புரளும் அலைகள்.

மறுபடியும் அலைகள் கரையத்தேடிவரும்
கடலின் நிலப்பரப்பைக் கண்ணுக்குத்
தெரியவிடமால் குளிர்ந்த நீரால் சுகம்
விசாரித்து கரையை முத்தமிட்டு
மறுபடியும் திரும்பிப்போகும்
இயற்கை இன்னும் மாறவில்லை.

ஆனால்... மனிதர்கள்..?
தன்னத்தனியே நின்று சூழலை நோக்குகையில்
தவித்துப் போகிறது மனது...
PAKEE Creation