Thursday, May 8, 2014

ஒவ்வொரு சொல்லுக்கும் அஞ்சினால்...

உலகத்தின்
ஒவ்வொரு சொல்லுக்கும்
அஞ்சினால் வாழ்க்கையை நடத்த முடியாது...

மனது...

பல நாட்களாக ஏங்கியது கிடைத்து விட்டால்
அதை பரிபூர்ணமாக அனுபவிக்க
மனதுக்கு துணிவு இருப்பதில்லை...

துயரம்...

துயரங்களின் தொடக்கம் கண்ணீரில் தான்
ஆனால் அதுவே தொடர்கதையாகி விட்டால்
சிந்தனை செயலற்றுப் போய்விடுகிறது...

ஊமைக்காதல்...

பேசி விளையாடுகிற காதலைவிட
ஊமைக் காதலுக்கு சக்தி அதிகம்
பேச்சில் அடங்குவது சில வார்த்தைகளே
பேசாத போது வளர்வது பல கோடி வார்த்தைகள்...

விடை...

சில பேரைப் பார்த்ததும் விரும்புகிறோம்
சில பேரை பார்த்ததும் வெறுக்கிறோம்
என்னுடைய சின்னஞ்சிறு மூளையிலிருந்து
இவற்றுக்கு விடை கிடைப்பதேயில்லை...

மனிதனின் உணர்சிகளோடு உறங்குகிறது கவிதை...


கவிதை உணர்ச்சிகளில் தான் உருவாகிறது
எல்லா ஜீவராசிகளுக்கும் (மனிதன் உட்பட )
அடிப்படையானவை உணர்ச்சிகள் அந்த உணர்ச்சிகள்
அழகைகண்டு , சோகத்தைகண்டு , உற்சாகத்தைக் கண்டு கொந்தளிக்கின்றன
அந்தக் கொந்தளிப்பு கவிதையாகக் சொற்களில் மலர்கிறது
ஆகையால் தான்
மலையழகு , மலரழகு , நதியழகு , கடலழகு
எல்லாம் கவிதைகளாக வடித்திருக்கின்றன
இத்தனையும் சேர்ந்த பெண்ணழகைப்பற்றி
வடித்துள்ள கவிதைகள் ஏராளம்
மனிதனின் உணர்சிகளோடு உறங்குகிறது கவிதை...

விதியின் இயற்கை...

கனவு என்பது மனத்தின் இயற்கை
கனவை உடைப்பது விதியின் இயற்கை
வாழ்வின் போக்கு இது
இதிலிருந்து யாருமே தப்பமுடிவதில்லை...

பெண்ணின் அழகு..

அடக்கமுள்ள பெண்களுக்கு இருக்கும் அழகு
அடக்கமில்லாத பெண்களுக்கு இருப்பதில்லை

தலைகுனிந்த பெண்ணிடம் இருக்கும் அழகு
தலைகுனியாமல் நிமிந்து நடக்கும்
தருணிகளிடம் கிடையாது

அச்சப்பட்டும் வெட்கப்பட்டும் கூனிக்குறுகும்
குமரிகளிடமுள்ள அழகு
உணர்ச்சிகளைக் கைவிட்டு உலாவும்
காரிகைகளிடம் கிடையாது

சுதந்திரத்தை ஆடவனிடம் பறிகொடுத்து அடங்கி
அவனிடம் வாழும் பெண்ணின் அழகு தெய்வீகமானது
அந்த அடக்கத்தில் சுதந்திரத்தை இழப்பதில்
மகத்தான சக்தி பெண்களுக்கு ஏற்படுகிறது

இயற்கை பெண்களை படைக்கும் போது
சில அம்சங்களை இயற்கையாகவே
படைத்தது விடுகிறது அதில்
அச்சம் , நாணம் , மடம் , பயிர்ப்பு
பெண்களுக்கே என்றும் உரித்தானவை
இந்த நான்கு அம்சங்களால் தான்
பெண் கடைக்கண் பார்வைக்குகூட
ஆண் அடங்கி விடுகிறான்...

பெண்கள் விரும்புகிறார்கள்...

அதட்டல் , கெடுபிடி இத்துடன் அன்பு
இத்தனையும் கலந்து பரிமாறும்
ஆண்மகனைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்...

வாழ்க்கை...

வாழ்க்கை என்பது ஒரு கல்லறையிலிருந்து
இன்னொரு கல்லறைக்கு போவதல்ல
அதைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையைக் கூடுமானவரை அசிங்கமாகவும், துயரமாகவும் சித்தரிப்பது
நன்மைக்காக என்று சொன்னால் கூட 
அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
வாழ்க்கையை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால்
அது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும்
எனவே நாம் ரொமாண்டிஸத்தை விரும்புகிறோம்
சாகசமும் கற்பனையுமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட
சிறையில் கிடப்பதோ
பூமிக்கடியில் பிணமாக இருப்பதே மேல்...

நாம் முட்டாள்...

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக
வேடம் அணிகிறோம், மற்றவர்கள்
அதைப் பார்த்து மகிழ்வதற்கு
ஆனால் நாம் தோற்பதில்லை
அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்
ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது
நாம் வென்றிருப்போம்!
எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை
நாம்தான் தீர்மானிக்க வேண்டும்...

பெண்...

கருங்கல்லின் கடினத்தன்மையையும்
விஷத்தின் கொல்லும் தன்மையையும்
எடுத்து இணைத்துத் தான்
பெண்ணை பிரம்மன் படைத்ததாக
வட மொழியிலுள்ள சாடு சுலோகம் சொல்லுகிறது...

பெண்கள்...

வாழ்க்கையில் பல சமயங்களில்
பலவீனமான இனம் என்று கூறப்படும்
பெண்ணினமே பலத்துடன் நிற்கிறது
பலமுள்ள இனத்தைச் சேர்ந்த
ஆண் பலமற்று போகிறான்
ஆணினத்தின் பலவீனத்தையும்
உணர்த்திருப்பதும் பெண்கள் தான்...

கற்பனைக் கதை...

கற்பனைக் கதைகளிலும்
உண்மை நிரம்ப இருக்கிறது
உணர்ச்சியில் இருந்து தான்
கற்பனையும் விளைகிறது
கதையும் விளைகிறது...

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்...

மனிதனை எது விட்டாலும் விடாவிட்டாலும்
இளமையில் ஏற்படும் பழக்க வழக்கங்கள்
மட்டும் விடுவதில்லை
இயற்கையின் காரணமாகவே
செயற்கையின் காரணமாகவே
பரம்பரையின் காரணமாகவே
இளவயதில் மனிதனைப் பிடித்து கொள்ளும்
குணாதிசயங்கள் ஆயுள் முடியுமட்டும்
அவனை பிடிக்கவே செய்கின்றன
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழி
காரணமில்லாமலா ஏற்பட்டிருக்கிறது...

அபாரசக்தி இரண்டு கை...

உலகத்திலேயே இரண்டு கைகளுக்குத் தான்
அபாரசக்தி உண்டு
ஒன்று பத்து மாத காலம் தாங்கிய
தாயின் ரத்தமோடும் கை
இன்னொன்று கட்டி வாழும் மனைவியின் கை
ஆண் மகன் நோயுற்ற காலங்களில் இந்தக் கைகள்
பட்ட மாத்திரத்தில் பெரும் சாந்தியுண்டு...

யாரும் தப்ப முடிவதில்லை...

ஒருவன் மகிழ்ச்சி
இன்னொருவனுக்குத் துன்பம்
ஒருவன் வெற்றி
இன்னொருவனுக்குத் தோல்வி
இந்த நியதியிலிருந்து யாரும்
தப்ப முடிவதில்லை...

உலகம் மிகச் சிறியது...

உலகம் மிகப்பெரிது என்று நாம் எண்ணுகிறோம்
ஆனால் அது உண்மையில் மிகச் சிறியது
ஏனென்றால்
நம்மையும் அறியாமலே நாம் எண்ணாத
இடங்களுக்குப் போகிறோம்
மனத்தாலும் சிந்திக்காத மனிதர்களைச் சந்திக்கிறோம் கனவிலும் எழாத நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம்
ஆகவே ஆண்டவன் படைப்பில் இந்தப் பரந்த உலகம்
மிகச் சிறிய கிரகம் தான்
அதன் நியதியால் வாழ்க்கையின் அலைகளில்
எடுத்து வீசப்படும் நாம் இந்தக் கிரகத்தின்
எந்தப் பாகத்தையும் அடைகிறோம்
எதிர்பாராத பல விசித்திரச் சம்பவங்களில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
அப்படி அகப்பட்டுக் கொள்ளும்போது ஆயுளில்
அறியாத முக்கிய உண்மைகளையும் அறிகிறோம்...

இறப்பு ஒரு பெரும் உறக்கம்...

இறப்பு ஒரு பெரும் உறக்கம்
அதற்குப்பின் மீண்டும் பிறப்பு உண்டு
உடல் தான் அழிகிறது
உயிர் அழிவதில்லை...

இயற்கையின் மர்ம படைப்பு...

இயற்கை உருவாக்கும் எதிலிலும்
மர்மமும் புதைந்து கிடக்கிறது
வெளிப்படையாகச் சிலவற்றையும்
மர்மமாகச் சிலவற்றையும் தோற்றுவிக்கின்றன
இயற்கையின் காட்சிகள்
மேகத்தை படைத்த இயற்கை
அதன் கருமையை கண்ணுக்குக் காட்டுகிறதேயொழிய
அதில் கர்ப்பமாயிருக்கும் நீரைக் கண்ணுக்கு காட்டுவதில்லை
உலகத்தின் படைப்பு எதிலும் தெரிவது பாதி 

தெரியாதது பாதி
தெரிந்ததை மட்டும் அறிந்து திருப்தி அடைகிறான்
அறிவு குறைந்தவன்
ஆராய்ச்சிக்காரன் தெரியாததிலும்
ஊகத்தைச் செலுத்த முற்படுகிறான்...

காதலில் மட்டும் தான் உயிர் மயிர் போல தெரிகிறது...


உயிர்மேல் ஆசையில்லாதவன்
உலகத்தில் யாருமே கிடையாது
கூன் , குருடு , நொண்டி , முடவன் , பிறர் காணச் சகிக்காத ரோகமுடையவன்
தள்ளாடும் கிழவன் ஆகியவர்கள் கூட
உலகில் தத்தித் திரிந்தாவது ஜீவிக்க
இஷ்டப்படுகிறார்களே யொழிய
உயிர்விட யாருக்கும் மனம் வருவதில்லை
இந்தப் உயிர்ப் பயமும் அதனால் உயிர்மீது ஏற்படும்
தீவிரப் பற்றுதலும் மனித சமுதாயத்துக்கு மட்டுமல்ல
எப்படியாவது பிழைத்திருக்க வேண்டுமென்ற முயற்சியால் தான்

செடி கொடிகள் கூடத் தங்கள் வேர்களை நிலத்தின் ஆழத்துக்கு அனுப்பி
நீர் நிலைகளை ஆராய்ந்து உணவை உறிஞ்சுகின்றன
வேங்கையும் சிங்கமும் மனிதர்களை நோக்கிப் பாய்ந்து கொள்ள முயல்வதும்
உயிரை எப்பிடியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான்
உயிர் அகன்றால் உலகம் இருண்டு போகிறது

ஆனால் இந்த காதலில் மட்டும் தான்
உயிர் மயிர் போல தெரிகிறது
எவ்வளவோ பாசங்களை கடந்து வாரோம்
அந்த இழப்பு பெரிதாக தோன்றுவது இல்லை
ஆனால் காதலி இல்லை என்றதாகி விட்டால்
உடம்புக்கு உயிர் சுமை போல தோற்றமளிக்கிறது...

காதல் பண்ணுங்க காதல் மேல உயிரை வைக்காதிங்க
நம்பிக்கை தைரியம் வைத்து காதல் பண்ணுங்க
உங்க காதலுக்கும் ஜெயம் தான்...

பெண்ணின் உணர்ச்சி...

பெண் உள்ளமே ஓர் அலாதி
ஆண் பிள்ளைகள் தங்கள் அங்க லாவண்யங்களைப்
பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயம் உண்டு
ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு
பார்த்து விட்டால் வெளியில் கோபம் உண்டு
பார்த்து மலைப்பது கண்டு உள்ளே மகிழ்ச்சி உண்டு
நாணமுண்டு அந்த நாணத்தை உடைக்க
ஆண்மகன் வரமாட்டானாவென்ற ஏக்கமும் உண்டு
இத்தைய பயம் , ஆசை , கோபம் , நாணம் , ஏக்கம் ஆகிய
வேறுபட்ட உணர்ச்சிகளின் அலை மோதல்தான் காதலின்பம்
அந்த இன்பத்திற்கு வசப்படாத பெண்
உலகத்தில் என்றும் பிறந்ததில்லை
இனிப் பிறக்கப்போவதுமில்லை
உணர்சிகள் எல்லோருக்கும் சமம்
இந்த உணர்ச்சிகளை அந்தஸ்தோ , சாதியோ , சமயமோ
எதுவுமே கட்டுப்படுத்த முடியாது
அந்தஸ்தும் சமயமும் சாதியும் கடலையும் காற்றையும்
கட்டுப்படுத்த முடியமா?
இயற்கையின் இந்தச் சக்திகளைப் போலத்தான் உணர்ச்சிகளும்
இயற்கைகளைக் கட்டுப் படுத்த முடிவதே இல்லை...

மனித ஊகம்...

மனித ஊகம் கண்களில் கண்டதோடு திருப்தி அடைவதில்லை
தெரிந்ததை விடத் தெரியாத விஷயங்களில்
கற்பனை அதிகமாக ஓடுகிறது
கற்பனை ஓட்டத்திலே காணும் இன்பக் கனவுகள் பல
பாதி திறந்தும் பாதி மறைந்தும் இருக்கும் அம்சங்களில்
கற்பனை வெறி பிடித்து ஓடுகிறது
மறைத்து நிற்கும் திரைச்சீலையைக் கிழித்தெறிய
மனம் துடிதுடிக்கிறது
இது தான் இயற்கையின் படைப்பு...

வறுமை , செழிப்பு...

ஒருவர் வறுமையாலேயே
மற்றொருவர் செழிப்பு ஏற்படுகிறது...

மனம்...

கண்ணின் வலிமையையும் ஆற்றலும்
ஒரு பொருளின் வெளித்தோற்றத்தைக்
காட்டுவதோடு முடிந்து போய்விடுகிறது
ஆனால்
மனத்தின் வலிமையோ அந்தப் பொருளின்
வெளித்தோற்றத்தையும் துளைத்துக் கொண்டு போய்
அதன் உள்ளுக்குள் இருக்கும் உண்மையை
உணர்த்தும் வரை தொடர்கிறது...
PAKEE Creation