Wednesday, January 18, 2017

ஆசை...

இங்க ஒவ்வொருவரும் தன் மனச்சாட்சிக்காக நல்லவர்களாக
இருக்க வேண்டும் என்பதை விடத்
தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக
நிரூபித்துக் கொண்டால் போதும்
என்ற ஆசைதான் இன்று மிகப்
பலரிடம் இருக்கிறது...

இயற்கையின் நியதி...


வண்டினை நாடி மலர்கள் சென்றதாய்
சரிந்திரம் உண்டா?
ஒத்த முனைகள் காந்தம்
தன்னில் ஓட்டியதுண்டா?

மயிலில் பெண்ணினம்
தொகை விரித்து ஆடியதுண்டா?
பெண் குயில் என்றும் ஆண் குயிலை
கூவி அழைத்ததுண்டா?

இவை இயற்கையின் விதிகள் புரிகிறதா? - ஆணே
பெண்ணை தேடி வருவதும்
அடிமை என்று தன்னை நினைப்பதும்
ஏவல் வேலை புரிந்து நிற்பதும்
"எஜமானி" என்று அவளை நினைப்பதும்
காத்திருத்து தாடி வளர்ப்பதும் - தோற்றால்
மதுவை நாடிச் செல்வதும்

ஆணே!
இயற்கையின் நியதியை மீற முடிந்தால்...

மாற்றிக்கொள்ளுங்கள் - உங்களை
தேடி பெண்களே நாடி வரச் செய்யுங்கள்!
அடிமை என்னும் மடமை எண்ணம்
விட்டுத் தள்ளுங்கள்

தாடியும் மதுவும் வேண்டாம்
என்று சத்தியம் செய்யுங்கள்
புத்தம் புதிய யுகத்தை அமைத்து
நிமிர்ந்து நில்லுங்கள்

மாற்றம் உண்டா - இயற்கை
விதியில் மாற்றம் உண்டா
மாற்ற முடிந்தால் மாற்றுங்கள்
இல்லை
உங்களை நீங்களே தேற்றுங்கள்...

சுற்றம்...

பொன் பொருள் உள்ளவரை கூடவரும்
இல்லாத வேளை எட்டி உதிக்கும்
நேருக்கு நேரானால் வாரியணைக்கும்
காணாத போது புறம் கூறும்
உதவி வேண்டி உருகி நிற்கும்
தேவை முடிந்தால் மறந்து போகும்
வாழ்வில் இயன்றவரை பிரிந்திருக்கும்
மரணத்தினால் சிலசமயம் இணைந்திருக்கும்
இதுதான் நம்மளை சுற்றி இருக்கும் சுற்றம்...

அறிவைப் பாவித்து மனதை வளர்ப்போம்...


பொதுவாக மனித மனம்
கிடைக்காத ஒன்றுக்காகவும்
இழந்துவிட்டவைக்காகவுமே
ஏங்கிக்கொண்டிருக்கிருப்பதும்
அவற்றை நினைத்து சோகத்திலிருப்பதுமே வழக்கம்.

கிடைத்திருப்பதையும் அதன் மதிப்பையும் உயர்வையும்
எண்ணிப் பார்க்கத் தவறியும் விடுகின்றது.

அதே மனம்
எப்போதும் தனக்கு மேலே உள்ள விடயங்களைப்
பார்த்து ஆசை கொண்டு
அதனால் கவலையை தேடிக்கொண்டுதான் இருக்கின்றதே ஒழிய.

தனக்கு கிடைத்ததையும்
தனக்கும் கீழே இருப்பவர்களின்
நிலையையும் எண்ணிப்பார்க்க மறுத்து விடுகின்றது.

இதுதான் மனித மனம்.
இதை வென்றவன் மகாத்மா ஆகின்றான்.
நாம் மகாத்மாக்கள் அல்லவே.
அதனால்தான் ஒவ்வொரு விடயத்திற்கும் சோகித்திருக்கின்றோம்.

அறிவைப் பாவித்து மனதை வளர்ப்போம்...

என் விதி...


ஒரு சாரம் மட்டும் கட்டிக்கொண்டு
சுதத்திரமாகத் திரித்த எமக்கு
இன்று ஒன்றுக்கு ஐந்து உடை போடும் சுமைகள்
வின்ரரில் கடும் குளிர் , சமரில் எரிக்கும் வெயில்
எமது நாடு சொர்க்க பூமி
என்றுதான் அதைப் பார்ப்பேன்? ஏங்குகின்றேன்
தென்னை, பனை, புழுதியில் புரளும் நாய்கள் ,
பூவரசு மரத்துக் குயில்
எல்லாவற்றையும் பிரிந்து விட்டு
என்னை இங்கு வாட வைத்ததே என் விதி...

யாருடன் நான் இசைந்துபோவது...


அம்மாவில் கொஞ்சம் மனைவியிடம்
நண்பனில் கொஞ்சம் தம்பியிடம்
அக்காவில் கொஞ்சம் காதலியிடம்
இப்படி... எல்லோரும் எல்லாமே
கலந்து - இசைந்து திரிகிறோம்
இவ்வாறெனில்
யாருடன் நான் முரண்படுவது
யாருடன் நான் இசைந்துபோவது...

என்மனம் வாழ்வை அறியும்...


சுதத்திரமாய் வாழ்க்கையை அனுபவித்து
வாழ்க்கையின் போக்கில் வாழ்வை ரசித்து
பின் அலையின் குமிழியாய் நானும் மிதந்து
வானில் துண்டு முகில்போல் அலைந்து
பிரான்ஸ் வீதி ஒரத்து நிழல்களில்
நேரம் மறந்து நடந்து திரிந்து
ஒவ்வொர் பனித்துளிகளிலும் நானும் நனைந்து
பனியின் பாசை அறிந்து
வாழ்வின் மர்மம் கண்டு
உலகின் வஞ்சகம் ஊடறுத்துணர்ந்து
எப்போது உள்மனம் அழுகிறதோ
அப்போது என்மனம் வாழ்வை அறியும்...

வாழ்க்கை...


சூன்யமாகி பட்டுப்போன
வாழ்க்கை காட்டில்
அடிக்கடி தீ வைக்கும்
கொடூரங்களும்
குறைந்த பாடில்லை

கடலது சுமையென்று
கண்ணீர் சிந்தினால்
பூமியின் பாரம்
குறைந்து விடவா போகின்றது

அத்தனை வலிகளை பற்றி
அப்பட்டமாய் எழுதியும்
என் அவலத்திற்கு
இதுவரை
விளம்பர எடுத்துக்காட்டைத் தவிர
வேறொன்றுமே
கிடைத்ததில்லை...

சீதனம்...


காலத்தின் மீது கள்ளச்சாட்டு சொல்லி
கைக்கூலி, சீதனத்தை
கட்டாயமாக்கி விட்டார்கள்
இரக்கமில்லாத இன்றைய மனிதர்கள்

திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது என்பது பொய்
ரொக்கத்தால் ஒத்திவைக்கப்படுகிறது என்பதே மெய்

அடிமையாய் தனை அடகுவைத்து
ஒரு துணைக்கு விலை தேடும் துயரம்
எனக்கு பின்னாகிலும் இல்லாதொழியாதா?...

போலி மூகமுடி...


எனக்கெதற்கு
இந்தப் போலி முகத்திரை
உயிரற்றுச் சுவாசிக்கவும்
உதட்டுச் சிரிப்புடன் வாழவும்
எனக்குப் பிடிக்கவில்லை

பார்த்தும் பாராதிருக்க
நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை
நடக்கச் சக்தியிருந்தும்
நடைபிணமாக
எனக்கொன்றும் நடந்துவிடவில்லை

எனக்கு வேண்டியவை
உரத்த சுவாசங்கள்
காற்றையும் உலுக்கும் வார்த்தைகள்
கனவுகளைச் சுமக்காத கண்கள்
சூரியனைச் எட்டிப்பிடிக்க ஓடும்
என் கால்கள்

என் நம்பிக்கை வானிற்கு இவை போதும்
என் விடுதலை வேட்கைக்கு
வேண்டாம் இந்தப் போலி மூகமுடி

பழைய வேதாந்தத் திரையைக்
கிழித்து வெளிவந்து
நிர்வாணமாக
என்னை நானாகப் பார்க்கப் பிரியப்படுகிறேன்...

என் அழகிய நாடே...


என் அழகிய நாடே
நீ இப்போது
எப்படியிருக்கிறாய்?

அந்நியனின்
ஆயுதங்களுக்கு
அஞ்சியா இருக்கின்றாய்?

நான் நடந்து திரியும்
அந்த மணல் பாதைகளில் இனவெறியர்
இரவு பகலாய் அலைகிறார்களாம்
மெய்யா?

என் இதயத்துள் இளமைப் பாடம்
நடாத்திய
அந்தப் பச்சை வயல் வெளிகளில்
நெருஞ்சியா பூத்திருக்கிறது?

எனக்கு தெரியும்
மனிதன் விரட்டப்படும் போது
மிருகம் சிரிக்குமென்று
எனக்குத் தெரியும்

ஒரே நாளில்
ஓடி வந்தவர்களெல்லாம்
உட்கார்த்திருக்கவில்லை

என் கனவு இதுதான்
மீண்டும்
என் கிராமத்தின் மடியில்
நான் தலை வைத்து
உறங்க வேண்டும்

திசையற்றுத் திரியும்
என் தோழர்களைத்
தொட்டுக்கொள்ள வேண்டும்...

எனக்கொரு ஆசை இருக்கிறது...


அன்பே
நிலா முற்றத்திலே
மார்பிலே சார்த்தி உன்
தலைமுடி கோதி
உச்சந்தலை மீது முத்தம் கொடுக்க வேண்டும்
ஆயிரமாயிரம் கிள்ளை மொழியில்
கொஞ்சி கதை பேசவேண்டும்
பறவைகளின் தாலாட்டில்
புல்லின் நுனியில் நாம் உறங்க வேண்டும்...

மாவீரம், தியாகம்...

மாவீரம், தியாகம் போன்ற பெரிய சொற்கள் எல்லாம்
யுத்தத்தின் யதார்த்தத்திலும் இடிபாடுகளுக்கிடையிலும்
சோகத்திலும், இழப்புகளின் கொடூரத்திலும்
கலாசாரமற்ற இதயங்களிலும்
அர்த்தம் இழந்து போய் விடுகின்றன...

பாரதி காந்தி புத்தர்...

பாரதியும் காந்தியும் புத்தரும்
இங்கே
பிறந்தது மட்டுமல்ல
இறந்ததுவும் தான்
பாறங்ககல்லில்
நாரை உரித்து உரித்தே
தங்களுக்குரிய தண்டனைகளைத்
தாங்களே நிறைவேற்றிக்கொண்ட
அமானுஷ்யங்கள்...

நல்ல மனைவி...

ஒரு நல்ல மனைவி
கணவனைப் பொறுத்த வரையில்
சில விஷயங்களில் குருடாகவும்,
சில விஷயங்களில் செவிடாகவும்,
சில விஷயங்களில் ஊமையாகவும்
இருக்க வேண்டும்...

வாழ்க்கை ஒரு போராட்டம்...

வாழ்க்கை ஒரு போராட்டம்
ஆமாம்
அது சாவிற்கான போராட்டம்
பரிதாபங்களின் பேருருவம்
சிக்கல்களின் வலைப்பின்னல்
நனவுகளின் கனவுநிலை...

மனிதர்களிடம் தேடினேன்...

மனித உறவுகள்
உலகெல்லாம் தேடினேன்
இதுவரை
ஒன்றேனும் காணவில்லை
மனிதர்களெனும் பெயரில்
நடமாடும் மிருகங்களை
நாள்தோறும் காண்கிறேன்
தூய உறவுகள்
மனிதர்களிடம் தேடினேன்
மனித மிருகங்களிடம்
தூய உறவை மட்டும்
எப்பிடிக் காண்பது...
PAKEE Creation