இங்கே விளக்குகள் மட்டுமா எரிகின்றன?
நாமும் தான்!
உடம்புகள் சாம்பலாகலாம்.
உணர்வுகளுமா?
கனவுகளை கைது செய்து
வாழ்க்கைச் சிறையில் அடைத்து
நினைவுகளைப் பிடித்து விடியல்களில் பூட்டினோம்
வாழ்க்கையே சிறையாகிட
நொண்டியான நினைவுகளால்
நாம் முடமாகினோம்
வேதனை ஓடைகளாக
மண்ணுக்கு சங்கமிக்க
கல்லறைக் கவிதைகளாக
நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்
எம்
இதயக்கதவுகள்
இழுத்து மூடப்பட
புதிய எண்ணங்களை
புதைகுழிக்குள் போட
நாமென்ன
அஃறிணைகளா?
ரகசியமாய் சுவாசிப்பதற்கும்
எம் இதயத்தின் சத்தம் எமக்கும்
கேட்காமலிருப்பதற்கும்
நாமென்ன மனிதர்களில்லையா?
நினைவுப் பூக்கள்
மனதில் மலர்வதற்கும்
கனவுத் தென்றல்
எம் வாழ்க்கைச் சோலையில்
நுழைவதற்கும்
அனுமதியா தேவை?
தோழர்களே
உதிரத்தில் இருப்பது
சிவப்பு நிறம் மட்டுமல்ல
எம் சந்ததியின்
சரித்திரமுந்தான்...
very good
ReplyDelete