உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!
உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...
திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...
எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.
செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!
மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்
அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்.
No comments:
Post a Comment