கனவு காணாதவர் யார்
தெரிந்தால் சொல்லுங்கள்
கனவு காணாதவர் எவரும் இல்லை
இயற்கை கூட
கனவு காண்கிறது
மேகத்தின் கனவு
வானவில்
இரவின் கனவு
ந்ட்சத்திரங்கள்
பூமியின் கனவு
மழை நீர்
ஆணின் கனவு
பெண்
கண்ணீரின் கனவு
புன்னகை
சொற்களின் கனவு
கவிதை
உண்மையின் கனவு
பொய்
கனவு கண்மூடி காணும் காட்சி
கனவு உறக்கத்தின் விழிப்பு
கனவு தூக்கம் போடும் புதிர்
கனவு ஆசைகளின் அந்தரங்க நீலப்படம்
கனவு காயங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
கனவு நினைவுகளின் உளறல்
கனவு நமக்கு நாமே பேசும் புரியாத மொழி
கனவு பொய்யல்ல
அது உண்மையின் நிர்வாணம்
கனவு மனிதனின்
அந்தரங்க அறை
அங்கே தான் அவன்
தனது நாடக வேசங்கள் அனைத்தையும்
களைந்து விட்டு
நிஜமாக இருக்கிறான்
கனவுகளே நமக்கு
சிறகுகள் தந்தன
கனவுகளே புதிய கரைகளுக்கு
நம்மை கொண்டு செல்லும்
கலங்கரை விளக்காக இருக்கின்றன
ஆகவே
கனவுகளால் வாழுங்கள்
கனவில் வாழாதீர்கள்...
No comments:
Post a Comment